ரமலான் சிந்தனை : இறைத்தூதரின் சில இறைஞ்சுதல்கள்

0
15

இறைவா! எங்கள் உள்ளம், எங்கள் நெற்றி, எங்கள் உறுப்புகள் அனைத்தும் உன் கையில்தான் உள்ளன. இவற்றில் எது ஒன்றுக்கும் நீ எங்களை உரிமையாளன் ஆக்கவில்லை. எனவே, நீயே எங்களின் ஆதரவாளன். எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக.

கருணையுள்ள இறைவனே! என் இதயம் உன் இரு விரல்களுக்கு இடையில் உள்ளது. நீ நாடிய வண்ணம் அதைத் திருப்புகிறாய். எனவே, என் இதயத்தை உன் நெறியில் நிலைப்படுத்திவிடு. உன்னுடைய நினைவில் என் இதயம் திருப்திப் பெறட்டும். என் உள்ளத்தில் சாந்தியையும் அமைதியையும் இறக்கி அருள்வாயாக.

என் இறைவா! உன்னைக் கொண்டு திருப்தி அடையும் இதயத்தை உன்னிடம் வேண்டுகிறேன். உன்னைச் சந்திக்க இருப்பதை உறுதியாக நம்புகிறேன். உன்னுடைய ஒவ்வொரு தீர்ப்பைக் குறித்தும் நான் திருப்தி அடைகிறேன். நீ வழங்குவதைக் கொண்டே என் இதயத்தைப் போதுமானதாய் ஆக்குவாயாக.

என் இறைவனே! என் மனத்துக்குப் பொருத்த மான வகையில் இறையச்சத்தை வழங்குவாயாக. என் இதயத்தைத் தூய்மைப்படுத்துவாயாக. நீயே தூய்மைப்படுத்துவோரில் மிகச் சிறந்தவன்.

இறைவா! உன் மீதுள்ள நேசத்தை மற்ற பொருட்கள் மீதுள்ள நேசத்தைவிட அதிகமானதாய் ஆக்குவாயாக. மற்ற அச்சங்களை விட உன் மீதான அச்சத்தை அதிகமாக்குவாயாக. இதர தேவைகளைத் துச்சமாகக் கருதும் அளவுக்கு உன் சந்திப்பில் பேரார்வத்தை ஏற்படுத்துவாயாக. உலக மோகத்தில் இருப்பவர்களுக்கு எவ்வாறு இன்பத்தை அளித்திருக்கின்றாயோ அவ்வாறு உனக்கு அடிபணிந்து நடப்பதில் எனக்கு இன்பத்தை அமைத்திடுவாயாக.

இறைவா! உன்னை நேரில் சந்திக்கும்போது, உன்னை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும்போது எப்படி அஞ்சுவேனோ அத்தகைய பயபக்தி மிக்க வாழ்வை வழங்குவாயாக.

உன்னை வந்து அடையும் வரையில் இறையச்சம் எனும் பாக்கியத்தை எனக்குத் தருவாயாக. உனக்கு மாறு செய்யும் துர்பாக்கியத்திலிருந்து காப்பாற்றுவாயாக.

இறைவா! என் கஷ்டங்களில் என் கையைப் பிடித்துக்கொள்வாயாக. என் முன் உள்ள பிரச்னைகளில் தெளிந்த அம்சங்களைத் திறந்து விடுவாயாக. நீ எதை விரும்புகிறாயோ அதையே தேர்வு செய்யும் பாக்கியத்தை அருள்வாயாக.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here