எச்சிலுக்கு ‘நோ’… வியர்வைக்கு ‘எஸ்’ * ஐ.சி.சி., கமிட்டி பரிந்துரை

0
10

‘‘பந்தை பளபளப்பாக்க பவுலர்கள் எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்படும். வியர்வையை பயன்படுத்தலாம்,’’ என கும்ளே தலைமையிலான ஐ.சி.சி., கமிட்டி பரிந்துரை செய்தது.

கொரோனா காரணமாக உலக விளையாட்டில் பல்வேறு மாற்றங்கள் வருகின்றன. கிரிக்கெட்டில் வீரர்கள் கைகுலுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் பவுலர்கள் பந்தை பளபளபாக்க எச்சில் பயன்படுத்த தடை என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்திய சுழல் ‘ஜாம்பவான்’ கும்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கமிட்டி, பந்தை பயன்படுத்தும் வழிகள் குறித்து, தனது பரிந்துரையை அளித்தது. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கை:

காரணம் ஏன்

ஐ.சி.சி., மருத்துவ கமிட்டி, ‘பந்தின் மீது எச்சிலை பயன்படுத்துவதால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு ஏற்படும்,’ என ‘அட்வைஸ்’ செய்தது. சுவாசத்தின் போது வெளியாகும் நீர்த்துளிகள் தொடர்பு காரணமாக கொரோனா பரவுவதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதனால் எச்சிலை பயன்படுத்த தடை விதிப்பது என கிரிக்கெட் கமிட்டி ஒருமனதாக முடிவு செய்தது.

வியர்வைக்கு அனுமதி

பவுலர்கள் பந்தை பளபளபாக்க தங்களது வியர்வையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. ‘வியர்வை வழியாக கொரோனா பரவுவது உறுதி செய்யப்படவில்லை. இதனால் வியர்வைக்கு தடை விதிப்பது தேவையற்றது,’ என மருத்துவ குழு பரிந்துரை செய்ததை, கும்ளே கமிட்டி ஏற்றுக் கொண்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்ளே கமிட்டி பரிந்துரைகளுக்கு வரும் ஜூன் முதல் வாரத்தில் அனுமதி கிடைக்கும் எனத் தெரிகிறது.

உள்ளூர் அம்பயர்

கடந்த 2002 முதல் டெஸ்ட் போட்டிகளில் நடுநிலையான 2 கள அம்பயர்களும், மூன்றாவது அம்பயரை ஐ.சி.சி., யும் முடிவு செய்தது. நான்காவது அம்பயர் மட்டும் தொடரை நடத்தும் நாட்டினை சேர்ந்தவராக இருப்பார்.

ஒருநாள் அரங்கில் ஒரு கள அம்பயர், மூன்றாவது அம்பயரை ஐ.சி.சி., முடிவு செய்யும். ‘டுவென்டி–20’ல் அனைத்து 4 அம்பயர்களும் தொடரை நடத்தும் நாட்டை சேர்ந்தவர் தான். இதில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது சர்வதேச போட்டிகளில் இனி முழுவதும் உள்ளூர் அம்பயர்களை பயன்படுத்தலாம். கொரோனா காரணமாக இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவை பொறுத்தவரை ஐ.சி.சி., எலைட் பேனலில் இருந்து அம்பயர் ரவி சமீபத்தில் நீக்கப்பட்டார். சம்சுதீன், விரேந்தர் சர்மா, அனில் சவுத்ரி போன்றவர்களுக்கு டெஸ்ட் அனுபம் கிடையாது. இவர்கள் வரும் 2021, ஜனவரியில் நடக்க உள்ள இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அம்பயராக செயல்பட்டால். தீர்ப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

கூடுதல் ‘டி.ஆர்.எஸ்.,’

அம்பயர் தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை செய்யும் முடிவில் (டி.ஆர்.எஸ்.,), ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாக தலா ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. இதன் படி, டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 3, ஒருநாள், ‘டுவென்டி–20’ல் தலா 2 முறை இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here