பெரும்புண்ணியம் நிறைந்த பிரதோஷ விரதம்! ஓர் முழுப்பார்வை

0
34

பிரதோஷ தரிசனம் பெரும்புண்ணியம். இந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும்.
ஒவ்வொரு கிழமைகளில் பிரதோஷம் வரும். எந்தக் கிழமையில் பிரதோஷம் வரும் போது, அப்போது தரிசிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என ஆச்சார்யர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஞாயிறு பிரதோஷம்:
சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு தவறாமல் சென்று தரிசிக்க வேண்டும். இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்:
பிரதோஷத்தில் ஸோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று தரிசிப்பது சிறப்பு! இதனால், மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. இதனால், செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும்.பித்ரு தோஷம் விலகும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

புதன் பிரதோஷம்:
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். இதனால், புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோஷத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்:
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோஷத்திற்குச் சென்று குருவுக்கு நிகரான சிவனாரை வணங்கவேண்டும். இதனால், கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும்!

வெள்ளி பிரதோஷம்:
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று தரிசிக்க வேண்டும். இதனால், உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சனி மஹா பிரதோஷம்:
சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்கு சென்று சிவனை வழிபடுவது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிட்டும்!

கண்டிப்பாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :
வருடத்திருக்கு 24 பிரதோஷங்கள் உண்டு. இவை அனைத்துக்கும் சென்று தரிசிக்க இயலாதவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும். இந்த 8 பிரதோஷத்திற்குச் சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.
தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷ தரிசனம் கவலை தீர்க்கும். ஆலயம் செல்லும் வாய்ப்பு உள்ள யாவரும் இந்நாளின் சிவ-நந்தீஸ்வர தரிசனத்தைத் தவறவிடாதீர்கள்!

பிரதோஷ‌த்தை யா‌ர் யா‌ர் கடை‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்?
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.
தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது விசேஷமானது.
மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம். பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் எதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.
சைவத்தைப் பொறுத்தவரையில் பிரதோஷம் என்பது பிரதானமான விரதம். அன்றைக்கு எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அது ஒரு அற்புதமான நாள். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடம்பும் நலம் பெறும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. குறிப்பிட்ட அந்த பிரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு எல்லாம் நீங்கும். அடுத்து, உடல் நிலை, மனநிலை எல்லாம் சீராகும். இதுபோன்ற சிறப்புகள் உண்டு.
பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.
பிரதோஷத்தில் ஏழு வகைகள் உள்ளது என்கிறார்களே…

அதெல்லாமும் உண்டு. சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொன்று உண்டு. ஞாயிறு அன்று ஆதிப் பிரதோஷம். திங்களன்று சோமவாரப் பிரதோஷம், மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம் என்று இருக்கிறது. இது எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம். இந்த சனிப் பிரதோஷம்தான் எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது. சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அந்த சனிக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி சாதகமாக வரும் என்று உள்ளது.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் அனைத்து கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சனி பிரதோஷத்தை முறையாக வழிபட நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி காலக்கட்டத்தில் பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன ஓம் நமசிவாய என்று ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.

பலன்கள் :
• பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

• பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும்.

• சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

• பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.

• பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.

• பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

21 வகை பிரதோஷங்கள்

நவ கோள் மகிழ்ந்து நம்மை வலம் செய்திடும்

மொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு. அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

1.தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாதப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு ஈசன் ஈடு இணையில்லா அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. சந்திரன் – மனோ காரகன்….
சந்திரன் பலம் இழந்து ஜாதகத்தில் இருக்க , அவருக்கு சந்திர தசை நடக்கும்போது – சிலருக்கு புத்தியே பேதலித்து விடுகிறது. சந்திர தசை – சனி புக்தி அல்லது சனி தசை – சந்திர புக்தி – இரண்டும் – அவ்வளவு மோசமான நேரங்கள் . எந்த நேரமும் அடியவர்களுக்கு நல்ல நேரமே. நவ கோள்களும் நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல அடியார்க்கு மிகவே என்னும் சம்பந்த பிரான் வாக்கிற்கிணங்க நீங்கள் சோம வார விருதம், சோம வார பிரதோஷ விருதம் இரண்டையும் கடை பிடியுங்கள். அதன் பின் சனி உட்பட எந்த கோளாலும் உங்களை பிடிக்க முடியாது. கோளறு பதிகம் சொல்லி ஈசனை 9 முறை தினமும் வலம் செய்யுங்கள். பின்னர் நவ கோள் மகிழ்ந்து நம்மை வலம் செய்திடும் உனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டும் என்று கேட்கும். நவ கோள் உட்பட அண்டத்தில் உள்ள யாவும் அரனின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்குபவையே.

12. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின்னர் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

13. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

14. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
15. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

16. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

17. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

18. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

19. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

20. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

21. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

இதில் நீங்கள் ஏதேனும் ஒருவகை பிரதோஷ விருதம் கடை பிடித்தாலும், அனைத்து பிரதோஷ விருதங்களையும் கடைப்பிடித்தாலும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று அதை சிந்தை மகிழ நீங்கள் கடைபிடித்தால் முந்தை வினைகள் அனைத்தும் நீங்கும். அஷ்ட லக்ஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் வாசம் செய்வார்கள். கஷ்டங்கள் யாவும் விலகும். அனைத்து தோஷங்களும் பிரதோஷ விருதத்தால் நீங்கும். ஆனால் ஒரே ஒரு தோஷம் மட்டும் அதனால் நமக்கு வரும். அது, சந்தோஷம் ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here