ஆரோக்கிய சேது செயலி தகவல்களை தவறாக பயன்படுத்தினால் சிறை.

0
24

ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை தவறாக பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தொழில்நுட்பம் வாயிலாக கொரோனா பாதிப்பு பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ‘ஆரோக்கிய சேது’ என்ற ஆப்பை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த ஆப் செயல்பட பயனாளர்களின் இருப்பிட வசதி, ப்ளூடுத் ஆகியவற்றை ஸ்மார்ட்போனில் ஆன் செய்ய வேண்டும். இதன்மூலம் எந்தப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றும், பாதிக்கப்பட்ட நபர்கள் எங்கெல்லாம் பயணம் செய்திருக்கிறார்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரசு தெரிந்து கொள்கிறது.

இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னே செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆரோக்கிய சேது செயலியை இதுவரை 9.8 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தி சுமார் 13,000 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மக்களின் அந்தரங்க தகவல்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம். தனிநபரின் அந்தரங்க தகவல்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.இதன்படி, பயனாளர்களின் இருப்பிட தகவலானது தனிமைப்படுத்துதல் மற்றும் குடிமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்படாத நபர்கள் தங்களைப் பற்றிய தகவலை செயலியில் இருந்து 30 நாட்களில் நீக்க முடியும்.

பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 45 நாட்களிலும், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 60 நாட்களிலும் தங்களைப் பற்றிய தகவலை இந்த செயலியின் பதிவிலிருந்து நீக்கி விடலாம். மேலும் 6 மாதங்களுக்கு மேல் இந்த செயலியில் தகவல்களை வைத்திருக்க தடை விதிக்கப்படுகிறது. ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் பிரிவு 51 முதல் 60 வரை மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here