யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த கதை❤️ டானியல் பூவர் அமைத்த பல்கலைக்கழகக் கல்லூரி : வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

0
44

History of Jaffna University

மிஷனரிமார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான தோமஸ் ஜெபர்ஸன் கல்வி பற்றிக் கூறிய கருத்துக்களைமுழுமையாக நம்பினார்கள். “கல்வியே சகலவிதமான முன்னேற்றத்திற்கும் ஒரே வழி” என்ற தோமஸ் ஜெபர்ஸன் கருத்தை மதித்தார்கள். டானியல் பூவர் மிகவும் ஒளி பொருந்திய சமுதாயமான மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இருந்து வந்தவர். ஆகவே அவர் கல்வியை வழங்குவதில் மிகவும் உற்சாகத்துடன் உழைத்தார். “கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு வாசிக்கும் பரம்பரை ஒன்றை உருவாக்குவது அவசியம்” என்று உணர்ந்த அவர், அந்த நோக்கத்துடனேயே தமிழ்ப் பள்ளிக் கூடங்களை அமைக்கத் தொடங்கினார்.

1816 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெல்லிப்பழையில் தமிழ்ப் பள்ளி ஒன்றை நிறுவினார். அப்பள்ளியின் பொறுப்பாசிரியராக டானியர் பூவரே செயற்பட்டார். அப்பள்ளியில் 30 பிள்ளைகள் கல்வி கற்க வந்தார்கள். சிறுது காலத்துக்குப் பின்னர் அவர் மல்லாகத்தில் ஒரு தமிழ்ப் பள்ளியை நிறுவினார். தெல்லிப்பளை, மல்லாகம் ஆகிய பாடசாலைகள் அக்காலத்தில் Native Free Schools என்று அழைக்கப்பட்டபோதும், அங்கு ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. தெல்லிப்பளை, மல்லாகம் பள்ளிகளுக்குப் பின்னர் டானியல் பூவர் மயிலிட்டி, மாவிட்டபுரம் ஆகிய இடங்களில் பாடசாலைகளை அமைத்தார். டானியல் பூவரின் கல்வி முன்னேற்றத்தைப் பற்றி 1818 ஆம் ஆண்டு மிஷன் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது.

“றிச்சேட்ஸ் அவர்களாலும், மெக்ஸ் அவர்களாலும் வட்டுக்கோட்டையில் ஒரு முறையான பள்ளிக்கூடத்தை அமைக்க முடியவில்லை. ஆனால் எட்டுப் பிள்ளைகள் ஆங்கிலம் பயில்வதற்காக மிஷன் வீட்டிற்கு வருகிறார்கள். தெல்லிப்பளையிலுள்ள டானியல் பூவர் தமது முதலாவது குடியமர்விலேயே ஒரு பள்ளிக் கூடத்தை ஆரம்பித்து விட்டார். ஒரு சில வாரங்களுக்குள்ளேயே முப்பது சிறுவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.”

அமெரிக்கன் மிஷன் விடுதிப் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களின் பேரூக்கம், திறமை ஆகியவற்றைக் கண்ட டானியல் பூவருக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. அதனால் அம்மாணவர்களுக்கு ஒரு உயர் கலாபீடத்தை நிறுவ விரும்பினார். இதன் பொருட்டு 1823 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மிஷனரிமார் ஒரு மனுவைத் தயாரித்ததுடன் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் உள்ள தமது நண்பர்கள், நலன்விரும்பிகள் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அனுப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் அக்கல்விக் கழகத்தின் நோக்கங்களைத் தெளிவாக விளக்கிக் குறிப்பிட்டார்கள். அதன் பிரகாரம் “ஆற்றல் உள்ள சுதேச வாலிபர்களுக்கு ஆங்கிலத்தில் பூரண அறிவை வழங்குவது” முதலாவது நோக்கமாகவும், “தமிழ் இலக்கியத்தை விருத்தி செய்வது” இரண்டாவது நோக்கமாகவும் அக்கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை 1823 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி முன்னோடிக் கல்லூரியாக மத்திய பாடசாலை ஒன்று வட்டுக்கோட்டையில் நிறுவப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக 1823 ஆம் ஆண்டு மிஷனரிமார் எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

“வட்டுக்கொட்டையே இதன் அமைவிடத்திற்கான தகுதியான இடம் என்று பரவலாகச் சிந்திக்கப்பட்டு வருகிறது. இந்தக் கலாபீடத்தின் தலைமையை ஏற்பதற்குச் சகோதரர்கள், டானியல் பூவரையே ஏகமனதாகத் தெரிவு செய்துள்ளார்கள். அவர் வெகுவிரைவில் வட்டுக்கோட்டைக்குச் சென்று விடுவார். தெல்லிப்பளையிலே அவர் செய்த பணியைத் தொடர்வதற்கு வண. வூட்வேட் வந்து சேருவார்.”

உயர்கலா பீடத்தை அமைக்கும் ஆவலினால் உந்தப்பட்ட டானிய பூவர், தமது தாய்ச் சங்கத்தின் அனுமதி, அரசின் உத்தரவு, நன்கொடைகள், உதவிகள் முதலியவற்றுக்காகக் காத்திருக்கவில்லை. அவர் முதல் கட்டமாக உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை ஆகிய ஐந்து விடுதிப் பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாற்பது ஆற்றல் நிறைந்த மாணவர்களைப் பாடசாலையில் இணைத்துக் கொண்டார். அக்காலத்தில் மத குருமார்களை உருவாக்கும் இறையியற் பள்ளிகளையே ‘செமினரி’ என்று அழைப்பார்கள். ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையிலும், அங்கிலிக்கன் திருச்சபையிலும் இப்பதம் பெரு வழக்காகக் காணப்பட்டது. இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலும் செமினரிகள் குருத்துவப் பள்ளிகளாகவே இயங்கின.

ஆனால் டானியல் பூவர் தமது உயர் கல்வி நிறுவனத்தைப் பட்டங்கள் வழங்கும் கல்லூரியாகவே நிறுவ முயன்றார். அமெரிக்காவில் அக்கால கட்டத்தில் பட்டங்கள் வழங்கும் கல்வி நிலையங்கள் ‘கல்லூரி’ அல்லது ‘கொலிஜ்’ என அழைக்கப்பட்டன. 1826 ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்கன் மிஷனரிமார் தாய்ச்சங்கத்தின் நிதி நிர்வாகக்குழு பொஸ்டனிலிருந்து, இலண்டன் குடியேற்ற நாட்டுக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு கல்லூரிக்கான அனுமதியைப் பெற முயன்றது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்த அமெரிக்கன் மிஷனரிமார் இலங்கையில் இருந்த பிரிட்டன் அதிகாரிகளிடம் உத்தரவைப் பெற முயன்றார்கள்.

அமெரிக்கன் மிஷனரிமாருக்குப் பல வழிகளிலும் உதவிகள் புரிந்த றொபேட் – ப்றவுண்றிக் இலங்கைத் தேசாதிபதி பதவியில் இருந்து 1820 ஆம் ஆண்டு நீங்கியதுடன், துணைத் தேசாதிபதியான எட்வேட் பான்ஸ் தேசாதிபதியாகப் பொறுப்பேற்றார். அமெரிக்கா மீது இயல்பாகவே வெறுப்புக் கொண்ட அவர், அமெரிக்கன் மிஷனரிமாரின் சமயப் பணிகளைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார். அதனால் அமெரிக்கன் மிஷனரிமார் கல்லூரியைத் தொடங்க விண்ணப்பித்த வேளையில், இலங்கையில் உள்ள அமெரிக்கன் மிஷனரிமாரின் தொகை இனி அதிகரித்தலாகாது எனவும், கல்லூரி ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாயின் பிரிட்டிஷ் பேராசிரியர்களைக் கொண்டே அது உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறான கல்லூரி ஒன்றை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாகவும் பதிலளித்தார்.

ஆனாலும் மனம் தளராத டானியல் பூவர், கல்வி நிறுவனத்தை வேறொரு பெயருடன் அமைத்து, கல்லூரிக் கல்விக்கு நிகரான கல்வியை வழங்க முடிவு செய்தார். இதனாலேயேதான் பொஸ்டனில் உள்ள தாய்ச்சங்கம் அமெரிக்கன் மிஷனரிமாருக்கு கலைக்கூடத்தை செமினரி என்று குறிப்பிடும்படி எழுதினார்கள். ஆரம்பத்தில் அவ் உயர்கல்வி நிறுவனத்தின் பெயர் டானியல் பூவர் அவர்களால் திட்டவட்டமாகக் குறிப்பிடப்படாமல், மத்திய பாடசாலை, செமினர், கல்லூரி எனப் பலவாறாகக் குறிப்பிடப்பட்டது. அமைக்கப்படவுள்ள உயர்கல்வி நிறுவனத்தின் அமைவிடம் தொடர்பாக அவர் ஏனைய மிஷனரிமாருடன் கலந்தாலோசித்தார். யாழ்ப்பாணத்திலேயே அக் கல்வி நிறுவனத்தை அமைக்க விரும்பிய அவர், மாவட்ட நீதிபதியான மூயார்ட் என்பவரின் வீட்டை வாங்க முடிவு செய்தார். 1827 இல் வட்டுக்கோட்டையில் அவ் உயர் கல்வி நிறுவனம் அமைய வேண்டும் என பூவரும், ஏனைய மிஷனரிமாரும் முடிவு செய்தனர். அதே வருடம் அக் கல்வி நிறுவனத்துக்கு ‘அமெரிக்கன் மிஷன் செமினரி’ என சம்பிரதாய பூர்வமாகப் பெயரிடப்பட்டது. அப்பெயர் 1846 ஆம் ஆண்டு ஹென்றி ஹெய்சிங்டன் அதிபராக இருந்த காலத்தில் ‘வட்டுக்கோட்டை செமினரி’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பட்டங்கள் வழங்கும் கல்லூரி ஒன்றை அமைக்கும் ஆர்வத்துடன் திட்டங்களை மேற்கொண்ட மிஷனரிமார், செமினரி என்ற பெயருடன் திருப்திப்பட வேண்டியதாயிற்று.

இடையூறுகள், சோதனைகள் பல ஏற்பட்டபோதும், மனம் தளராது தனியொரு ஆசிரியராக டானியல் பூவர் பாடம் போதிக்கத் தொடங்கினார். ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை கல்வி நிறுவனத்தின் ஆணி வேரையே சாய்த்து விடும் ஆபத்தில் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாத அவர், சுதேச ஆசிரியர்கள் சிலரை அங்கு பணி புரிய வைத்தார். டானியல் பூவரின் மனிதாபிமான கல்வித் தொண்டுக்கு தோள் கொடுத்து உதவிய சுதேச ஆசிரியர்களுள் ‘காபிரியேல் திசேரா’ என்பவர் முதன்மையானவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகவும் பாண்டித்தியம் பெற்ற அவர், பாடங்களைப் பரந்த ஆய்வுத் திறனுடனும், விரிந்த நோக்கத்துடனும் கற்பித்தார். வட்டுக்கோட்டை செமினரியின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு பேருதவியும், உறுதுணையும் புரிந்த காபிரியேல் திசேரா, டானியல் பூவரின் அற்புதமான கண்டுபிடிப்பாவார் என்பதில் ஐயமில்லை.

மனம் தளராத டானியல் பூவர் ஓர் உயர்ந்த கல்வியறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியுடன் இருந்த காரணத்தாலேயே அவரால் ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டி, அங்கு பாடங்களை நடத்த முடிந்தது. செமினரியின் முதல் அதிபராகவும், பேராசிரியராகவும் இருந்து கணிதம், இயற்கைத்தத்துவம், கிறீஸ்தவம் ஆகிய பாடங்களைத் தனியொருவனாகவே கற்பித்தார். அவருடைய இந்நடவடிக்கை சிலருக்குக் கேலிக்கூத்தாக இருந்தாலும், பேரறிஞர்களின் ஞானப்பார்வைக்கு நெஞ்சுரம் மிக்க கல்விமானின் கம்பீரமான செயற்பாடாகவே இருந்தது.

தமிழ் மொழி மேல் அமெரிக்கன் மிஷனரிமாருக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் கலந்த ஈடுபாடு உள்ளுர்த் தமிழ்ப் பிரமுகர்களை ஈர்த்தது. அதனால் தமது தாய் மொழியான தமிழ் மொழியைக் கற்கத் தலைப்பட்டார்கள். இதனால் அகன்று விரிந்த, ஆழம் மிக்க தமிழ்க் கல்வி தழைக்கலாயிற்று. மிகச் சிறந்த, உயர்ந்த தமிழ் அறிஞர்கள் உள்ளூரிலேயே உருவானார்கள். டானியல் பூவரின் வட்டுக்கோட்டை செமினரியானது கலைத்துடிப்பும், கல்விச் செழிப்பும் நிறைந்த உள்ளூர் மாணவர் பரம்பரை ஒன்றை உருவாக்கியது. மதப் பணியாற்ற வந்த டானியல் பூவர் போன்ற மிஷனரிமார் குழு வழங்கிய தமிழ்ப்பணி மற்றும் கல்விப்பணி மூலம் ஆற்றலும் ஆர்வமும் மிக்க ஆறு ‘பிள்ளை’த் தமிழர்கள் உருவானார்கள். சி.வை.தாமோதரம்பிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, ஆர்ணல்ட் சதாசிவம்பிள்ளை, வைமன் கதிரவேற்பிள்ளை, எட்வேட்ஸ் கணபதிப்பிள்ளை, கரோல் விசுவநாதபிள்ளை ஆகியோரே அந்த ஆறு தமிழர்களுமாவார்கள்.

வட்டுக்கோட்டை செமினரி முப்பத்திரண்டு வருட காலம் அரிய பணி புரிந்ததுடன், அக்கால கட்டத்தில் கிட்டத்தட்ட எழுநூறு கல்விமானகளையும் உருவாக்கியது. அக்கல்விமான்கள் கிறிஸ்தவ மதத்துக்கும், தமிழ் மொழிக்கும் அரிய தொண்டாற்றினார்கள். அங்கு கற்றவர்கள் பல அரிய நூல்களை எழுதினார்கள். ஆர்ணல்ட் சாதாசிவம்பிள்ளை எழுதிய நூல்களுள் ‘பாவலர் சரித்திர தீபகம்’ நூல், நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை எழுதிய நூல்களுள் ‘நியாய இலக்கணம்’ நூல் முதலிய ஆக்கங்கள் சிறந்த படைப்புக்களாகும். கரோல் விசுவநாதபிள்ளை எழுதிய நூலான ‘சுப்பிரதீபம்’ என்ற ஆக்கத்திலே டானியல் பூவரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“வாய்மையும், தூய்மையும், நீதியும், நிறைவும், அன்பும், பொறையும் சிறந்து விளங்கிய புவர் ஐயர் (டானியல் பூவர்) முதலிய மகான்கள் இங்குதித்து; அலகைவாயிலும் அகந்தை வாயிலும், உலக வாயிலிலும், உடல வாயிலிலும், அகப்பட்ட ஆன்மாக்கள் வீடு பெற்றுயும்படி, இரட்சாபெருமானின் திருநாமத்தை உபதேசித்துக் கைமாறு கருதாது உதவுகின்ற மேகம் போல, வைதீக – லௌகீகக் கல்விப் பொருளை வழங்கினார்கள்.”

வட்டுக்கோட்டை செமினரியில் டானியல் பூவர் அதிபராக இருந்த சந்தர்ப்பத்தில் பல சுவாரிசியமான நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று சந்திரகிரகண சர்ச்சையாகும். அச்சந்திரகிரகணம் 1929 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அதை அராலி விஸ்வநாத சாத்திரியாரும், டானியல் பூவரும் பஞ்சாங்கம் மூலம் கணித்தாலும், இருவருடைய பஞ்சாங்கமும் வேறுபாடுகளுடன் காணப்பட்டன. ஆனால் இறுதியில் டானியல் பூவர் கணித்த நேரத்தின்படி சந்திரகிரகணம் இடம்பெற்றதுடன், அப்போட்டியில் பூவரே வெற்றி பெற்றார். இதனால் விஸ்வநாத சாத்திரியாருக்கும் செமினரிமாருக்கும் உறவு வளர்ந்ததுடன், மிஷனரிமாருக்கு சாத்திரியார் இந்து சாஸ்திரத்தைக் கற்பித்தார்.

டானியல் பூவர் செமினரியை அளவற்று நேசித்தார். ஆனாலும்1855 ஆம் ஆண்டு பொஸ்டனில் இருந்த அமெரிக்கன் மிஷன் தாய்ச் சங்கம் செமினரியை மூடிவிடத் தீர்மானம் எடுத்தது. வட்டுக்கோட்டை செமினரி நற்செய்திப் பரம்பலுக்குத் துணைபுரியவில்லை என்பதே அதற்கான காரணமாகும். செமினரியை மூடுவதை எண்ணமாகக் கொண்ட அண்டர்சன் விசாரணைக் குழுவினர் பம்பாய் வந்தடைந்து விட்டனர் எனவும், வெகு விரைவில் வட்டுக்கோட்டைக்கு வந்து விடுவார்கள் எனவும் அறிந்து கொண்ட மரணப்படுக்கையில் நோயுற்றிருந்த பூவர் பின்வருமாறு கடிதம் எழுதுமாறு தமது சகாக்களுக்குப் பணித்தார்.

“தூதுக் குழு கடவுளினால் அனுப்பப்பட்டதென்று எண்ணியிருந்தேன் என்றும், அவர்களிச் சந்திக்க ஆவலோடு காத்திருந்தேன் என்றும் டொக்டர். அண்டர்சனுக்குக் கூறுங்கள். ஆனால் நான் அவருக்குத் தாராளமாக எழுதியுள்ளேன். உங்கள் எல்லோருக்கும் எனது எண்ணம் என்னவென்று தெரியும். அவர்கள் வரும்போது நான் மறைந்து விடுவதே மேல் என்று எனக்குப்படுகிறது. உண்மை என்றோ ஒரு நாள் வெளியாகும். இதனையே நான் டொக்டர். அண்டர்சனுக்குக் கூறிக் கொள்ள விரும்பிகிறேன்.”

டானியல் பூவர் இவ்வாறு கூறும்போது, அவர் தனது செமினரி சேவையையும் மதுரை சேவையையும் முடித்துவிட்டு, மானிப்பாயில் கிறிஸ்தவ ஊழியம் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1855 ஆம் ஆண்டு செமினரி மூடப்பட்ட பின்னர், செமினரி ஆசிரியர்களும் மாணவர்களும் இலங்கையின் பல பாகங்களுக்கு, தென்னிந்தியாவுக்கும் சென்று அரும்பணி ஆற்றினார்கள். மேலும் 1857 ஆம் ஆண்டு சென்னையில் பிரிட்டன் அரசு ஒரு சர்வகலாசாலையை நிறுவியது. வட்டுக்கோட்டை செமினரியில் இருந்து இரண்டு பட்டதாரிகள் அங்கு சென்று பரீட்சைக்குத் தோற்றினர். அச் சர்வகலாசாலை தனது முதலாவது கலைமானித் தேர்வை நடத்தியவேளை, அத்தேர்வில் இரண்டு பேர் மாத்திரம் சித்தியடைந்தார்கள். அவர்கள் இருவரும் வட்டுக்கோட்டையில் கல்வி கற்ற சி.வை.தாமோதரம்பிள்ளையும், கரோல் விஸ்வநாதபிள்ளையுமே ஆவார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த சென்ற குறிப்பிட்ட இருவருமே B.A பரீட்சைக்குத் தோற்றத் தகுதியானார்கள் என தேர்வானார்கள். இவர்கள் இருவருமே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதலில் பட்டம் பெற்ற இருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வட்டுக்கோட்டை செமினரி தரமான கல்வியை வழங்கியமை புலனாகிறது.

யாழ்ப்பாணக் கல்லூரியின் அடித்தளமான வட்டுக்கோட்டை செமினரி 1823 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி முன்னோடி மத்திய பாடசாலை என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. டானியல் பூவரி கனவான வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்டாலும் அக் கல்விப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே யாழ்ப்பாணக் கல்லூரி இன்றும் விளங்குகிறது. யாழ்ப்பாணக் கல்லூரியின் தற்போதைய பெயர் 1872 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்படுகிறது. ஆகவே 1922 ஆம் ஆண்டளவில் ஆரம்ப கல்வி நிறுவகத்தின் நூற்றாண்டையும், யாழ்ப்பாணக் கல்லூரியின் பொன் விழாவையும் கொண்டாடும் மனநிலையில் அனைவருக்கும் இருந்தனர். 1923 ஆம் அப்பாடசாலை நூற்றாண்டைக் கடந்திருந்தாலும் இரண்டாம் நிலைப் பாடசாலையாக இருந்தது. ஆனாலும் அக்காலத்தில் கல்லூரி என்றே அழைக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் கல்வி வழங்கும் கல்லூரிகள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க முடியும். ஆனாலும் அக்கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் அதிகாரம் மிக்கதாக இருக்கவில்லை. ஒரு நாட்டு அரசாங்கம் வழங்கும் பட்டங்களுக்குக்குத்தான் அவ்வாறான அதிகாரங்கள் இருந்தன. அக்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசு ஒரு அமெரிக்கன் அமைப்புக்கு அவ்வாறான பட்டங்களை வழங்கும் அதிகாரங்களை வழங்க விரும்பவில்லை. எனவேதான் சர்வகலாசாலையின் வசதிகளை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்ட பாடசாலை மூலம் அதிகாரம் மிக்க பட்டங்களை வழங்கும் பொருட்டு பல திட்டங்களை முன்னெடுத்த மிஷனரிமார், அக்கல்வி அமைப்பை மிஷனரி என்றே அழைத்தார்கள். நாட்டில் கல்வி நிலை மிகவும் குறைந்த நிலைமையில் இருந்த அக்காலத்தில் செமினரியில் பலதரப்பட்ட பாடங்கள் மிகவும் உயர்ந்த தரத்தில் அவரவர் தகுதிக்கேற்ப கற்பிக்கப்பட்டது. அக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்த இரண்டு சர்வகலாசாலைகளான கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போட் தொடர்பாக அந்நாடு மிகவும் பெருமை கொண்டிருந்தது. பிரபல ஆங்கிலேயக் கல்விமானகள் இங்கு வந்து சென்றார்கள்.

அவ்வாறு 1848 ஆம் ஆண்டு செமினரிக்கு வருகைதந்த சேர்.எமர்சன் ரெனட் – குடியேற்ற நாடுகளின் செயலாளர் மற்றும் கல்வியலாளர் பின்வருமாறு கூறினார். “அங்குள்ள மாணவர்களின் கல்வியறிவு மிகவும் மேலானது. அத்துடன் வட்டுக்கோட்டை கல்வி நிறுவனத்தின் நடத்தப்படும் கற்கைமுறை ஐரோப்பிய கலாசாலை தரத்துக்கு நிகரானது.” இவ்வாறு பல சிறப்புக்களைக் கொண்ட வட்டுக்கோட்டை செமினரி 1855 ஆம் ஆண்டு மூடப்பட்டமை யாழ்ப்பாண மக்களுக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தது.

கிறிஸ்தவ சமய மாற்றப் புள்ளி விபரங்கள் திருப்திகரமாக இல்லை என்பதாலும், கிறிஸ்தவ நற்சிந்தனைகள் முறையாக மக்களைச் சென்றடையவில்லை என்பதாலும் மிஷனரி மூடப்பட்டது. அம்மிஷனரி மூடப்படுவதற்கு முற்பட்ட 12 வருட காலப் பகுதியில் அமெரிக்கன் மிஷன் தலைமையகத்தால் ஒரு தூதுக்குழு இங்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பொருட்டு அண்டசன், தொம்சன் ஆகிய இருவரும் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு, பாடசாலைகள் மதமாற்றம் செய்யப்பட்டவர்களுடன் மாத்திரம் இயங்கத் தேவை இல்லை என்ற அறிவுரையுடன் இந்தியா மற்றும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அக்குழுவினர் 02 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 1855 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள். 10 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 1855 இல் வட்டுக்கோட்டை செமினரி பட்டதாரி மாணவர்கள் இணைந்து அவர்களை வரவேற்கும் நிகழ்வையும் ஒரு சிறப்புக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தனர். அக்காலத்தில் வட்டுக்கோட்டை செமினரியில் கல்வி கற்ற 454 பட்டதாரி மாணவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் கலந்தி கொண்டனர். அக்கூட்டத்தில் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் ஒருவர், அங்கு கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக வேண்டினார்.

வட்டுக்கோட்டை பிரதேசத்தில் உள்ளவர்கள் மற்றும் தூதுக் குழுவினர் ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து செமினரி தொடர்பான ஒரு கூட்டத்தை 25.04.1855 இல் கூட்டி, அம்மிஷனரி தொடர்பாக கலந்து ஆலோசித்தார்கள். முடிவாக ஸ்மித் (Smith), சாண்டேர்ஸ் (Sanders) மற்றும் ஹேஸ்டிங்ஸ் (Hastings) ஆகிய மூவரிடம் வட்டுக்கோட்டை செமினரி தொடர்பான ஒரு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு செமினரி கையளிக்கப்பட்டது. அதன்பொருட்டு மூவரும் ஒரு அறிக்கையைத் தயாரித்து வழங்கியிருந்தாலும், அவ் அறிக்கை மேலிடத்தால் நிராகரிக்கப்பட்டமை துயரமானதே. இதேவேளை டானியல் பூவர் சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்தை உலுக்கிய கொலரா நோயால் மரணமடைந்திருந்தார்.

வட்டுக்கோட்டை செமினரியில் கல்வி கற்ற மாணவர்களின் சிறிய வீதத்தினர் மாத்திரம் கிறிஸ்தவர்களாக இருந்தனர். அத்துடன் கிறிஸ்தவ பட்டதாரி மாணவர்கள் பலர் பட்டம் பெற்ற பின்னர் பதவி, சீதனம் முதலிய காரணங்களுக்காக மீண்டும் இந்து மதத்துக்கு மாறினார்கள். ஆகவே தூதுக் குழுவினர் இந்நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர விரும்பினார்கள். மேலும் அவர்கள் இளைய செமினரிமாரின் கருத்துக்களை ஓரளவு கவனத்தில் எடுத்தார்கள் என்பதுடன் ஏனையவர்களின் கருத்துக்கள் தொடர்பாக அவ்வளவு கவனம் செலுத்தவில்லை. ஆகவே அங்கு பணியாற்றிய சிரேஷ்ட மிஷனரிமார் தங்கள் மன ஒப்புதல் இல்லாமல் மேலிட உத்தரவுகளுக்கு கீழ்ப்பணிந்தார்கள்.

1855 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்று கூடிய அமெரிக்கன் மிஷன் குழுவினர் வட்டுக்கோட்டை செமினரி தொடர்பான சிபார்சுகளை ஏற்க மறுத்தது. 1855 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செமினரியை மூடுவது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக அதே ஆண்டு செப்டெம்பர் வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்டது. இம் முடிவின் மூலம் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலம் பெற்றதும், கல்விக்குப் பெயர் பெற்றதுமான வட்டுக்கோட்டை செமினரியின் கிட்டத்தட்ட 32 வருட கால கல்விச் சேவை நிறைவடைந்தது. இச் செமினரிக்காக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் சேகரிக்கப்பட்ட பணத்திற்கு மேலதிகமா கிட்டத்தட்ட 20,000 பவுண்டுகள் செலவழிந்தன. அத்துடன் அது தொடர்பாக மீண்டும் 1856 ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட ஒரு குழுவினர் கூடி ஆராய்ந்தார்கள்.

1856 – 1872 காலப்பகுதி

1856 ஆம் ஆண்டு தொடக்கம் 1872 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 17 வருடங்கள் அப்பகுதியில் செமினரி இல்லை என்பதுடன், செமினரிக்கு நிகரான எந்த ஒரு கல்வி நிறுவனமும் அங்கு தோற்றம் பெறவில்லை. அப்பிரதேசக் கல்வித் தேவையை அங்கிருந்த வட்டுக்கோட்டை உயர் பாடசாலையோ அல்லது பயிற்சிக் கல்லூரியோ நிறைவேற்றவில்லை. வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்ட பின்னர் அப்பிரதேசத்தில் மிஷனரியின் இடம் மீண்டும் நிரப்பப்படவில்லை என்பதுடன், செமினரி மூடப்பட்ட பின்னர் சகல மிஷன் கல்லூரிகளிலும் ஆங்கில மொழி மூலக் கல்வியும் நிறுத்தப்பட்டது. அந்நடைமுறை மக்களுக்கு பாரிய பின்னடைவைக் கொடுத்தது.

அவ்வேளையில் மூடப்பட்ட வட்டுக்கோட்டை செமினரியின் கீழ் வகுப்பு மாணவர்கள் ஒன்று சேர்ந்து தமக்கு தனிப்பட்ட ஆசிரியர் ஒருவரை நியமிக்குமாறு வண.ஹௌலண்ட் (Rev. W.W.Howland) அவர்களிடம் வேண்ட, அவர் அவர்களுக்கு வேண்டிய உதவி செய்யுமாறு தமது உதவியாளர் வண.குக் (J.P.Cooke) அவர்களைப் பணித்தார். அதன்பிரகாரம் தெல்லிப்பழை செமினரி ஆசிரியரான ரொபேட் (Robert Breckenridge) வட்டுக்கோட்டை செமினரி வளாகத்தில் தனிப்பட்ட பாடசாலை ஒன்றை 1856 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 50 மாணவர்களுடன் ஆரம்பித்தார். அப்பாடசாலை மாணவர் தொகை மிக விரைவில் அதிகரிக்கத் தொடங்கியதுடன் இடப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. ஆகவே ரொபேட் (Robert Breckenridge) அவர்கள் பாடசாலைத் தேவைக்காக மிஷன் இல்லத்தையும் (Mission House) வேறு சில கட்டடங்களையும் வேண்டினார். அதற்கான அனுமதியும் மிஷனால் வழங்கப்பட்டது. அவருக்கு உதவியாக வில்லியம் நெவின்ஸ், டானியல் நைல்ஸ், ஜே.பி.குக், ரி.எம்.தம்பு, ஜே.லைமன், ஆகியோர் உதவியாளர்களாக இருந்ததுடன், மக்களிடம் அக்கல்வி நிறுவனத்துக்கு நல்ல மதிப்பு உருவானது.

ஆரம்பத்தில் அப்பாடசாலைக்கு அரச அல்லது மிஷன் நிதி உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. மாணவர்களிடம் இருந்து பெற்றப்பட்ட கட்டணங்களில் மாத்திரம் பாடசாலை இயங்கியது. ரொபேட் (Robert Breckenridge) அவர்கள் மிக உயர்ந்த கிறிஸ்தவப் பண்புகளுடன் கூடிய சிறந்த ஆசிரியராகவும்,கல்விமானாகவும், நிர்வாகியாகவும் மாணவர்கள் மனதில் கணிக்கப்பட்டார். அவர் கிறிஸ்தவ முறைப்படியே பாடசாலை இயங்கினார். மாணவர்கள் பைபிள் வாசிப்பிலும், ஞாயிற்றுக்கிழமைப் பாடசாலையிலும் பங்கேற்குமாறு வேண்டப்பட்டார்கள். அவருடைய மாணவர்களில் பலர் கல்வி கற்று மத குருவாக மாறினார்கள். அவருக்கு வலது கரமாக ஜே.பி.குக் விளங்கினார். மேற்குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்க மிஷன் அதிபர்கள் இருவர் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 1910 ஆம் ஆண்டு தொடக்கம் இப்பாடசாலை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஒரு பகுதியாக விளங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 1859 ஆம் ஆண்டு மிஷன் பயிற்சிப் பாடசாலை வட்டுக்கோட்டை செமினரி வளாகத்தில் எம்.டி.சாண்டர்ஸ் (M.D.Sanders) அவர்களை அதிபராகக் கொண்டு மூன்று ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களை கிறிஸ்தவத் தொண்டர்களாகவும், ஆசிரியர்களாகவும் பயிற்றுவிப்பதே அப்பாடசாலையின் நோக்கம் ஆகும். அங்கு சுய பாஷையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், செலவுகளை மிஷன் பொறுப்பேற்றுக் கொண்டது. ஆனாலும் யாழ்ப்பாணக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அப்பாடசாலை தெல்லிப்பழைக்கு மாற்றப்பட்டது.

அத்துடன் இக்கால கட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு கல்வி நிறுவங்கள் தவிர கிறிஸ்தவ மதத்துடனும், இந்து மதத்துடனும் இணைந்து பல பிரத்தியேக ஆங்கிலப் பாடசாலைகள் கல்விப் பணியாற்றின. ஆகவே பெருந்தொகையான இளைய சமூகத்தினரை இரண்டு தசாப்த காலமாக வசப்படுத்தக்கூடிய அதிஷ்டகரமான வாய்ப்பை வட்டுக்கோட்டை செமினரி இழந்தது என்றால் மிகையில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல ஆங்கில உயர் கல்வி மேல் ஏற்பட்ட ஆசை காரணமாகவும், தேவை காரணமாகவும் வட்டுக்கோட்டை செமினரியில் பட்டதாரிகளான யாழ்ப்பாணத்து முன்னணி மக்கள் செமினரிக்கு ஈடான ஒரு கல்வி நிறுவனத்தை அங்கு நிறுவ முற்பட்டார்கள்.

1872 – கல்லூரியின் ஆரம்பம்

1867 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணக் கல்வி வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாள் ஆகும். அன்று வட்டுக்கோட்டையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. வட்டுக்கோட்டை செமினரிக்குப் பதிலாக ஒரு கல்விக் கூடத்தை நிறுவுவதே அக்கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருந்தது. ஆனாலும் அதற்கான நிதியுதவியை அமெரிக்காவில் இருந்தே பெற வேண்டியே இருந்தது. ஆனாலும் அவ்வாறு பணம் பெற்றாலும் அக்கல்வி அமைப்புக்கு அண்டர்சன் குழு மூலம் வந்த முடிவு வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அதனால் அக்கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு புரட்டஸ்தாந்து கிரிஸ்தவர்களாலும், அவர்களின் நம்பிக்கையாளர்களாலும் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. நிதியுதவையை அமெரிக்கன் மிஷன் நிர்வாகத்தினரிடம் கேட்காமல், நண்பர்கள் மூலம் பெற்று மிஷனை நிதிப் பொறுப்புக்களில் இருந்து விலக்கத் தீர்மானித்தார்கள். மேலும் உள்ளூரிலேயே பணிப்பாளர் சபையை ஸ்தாபிக்கவும் முடிவு செய்தார்கள். அக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் பல பிரேரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பிரதேச இளைஞர்களின் உயர் கல்வித் தேவையை நிறைவு செய்வதற்காக புரட்டஸ்தாந்து மத அடிப்படையில் யாழ்ப்பாணக் கல்லூரியை நிறுவுவது என்றும், அங்குள்ளவர்களே கிறிஸ்தவ ஆலோசகர்களாகவும், ஸ்தாபக சபை உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும் என W.நெவின்ஸ் பிரேரித்த தீர்மானம் வண. B.H.றைஸ் அவர்களால் ஆமோதிக்கப்பட்டது. மேலும் அக்கல்வி நடவடிக்கைகளுக்காக 50,000 ரூபாவை சேர்ப்பது எனவும், அத்தொகைக்கான வட்டிப் பணத்தை சம்பளமாகச் செலுத்தி நான்கு சுதேச போதனாசிரியர்களை வேலைக்கு அமர்த்துவது, அமெரிக்கன் போர்ட் மூலமாக அதிபர் ஒருவரைப் பெற்றுக் கொள்வது உட்பட பல தீர்மானங்கள் அங்கு பிரேரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மேலும் அமைக்கப்படவுள்ள பாடசாலை வட்டுக்கோட்டையில் அமைய வேண்டும் எனவும், மத அடிப்படையில் அல்லாது மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும், பணிப்பாளர் சபையில் இருபதுக்கும் மேற்படாமல் அங்கத்தவர்கள் இருப்பதுடன் அதில் அரைப் பங்கினர் வெளிநாட்டவர்களாக இருக்க வேண்டும் முதலிய தீர்மானங்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகளால் யாழ்ப்பாணக் கல்லூரி புத்துயிர் பெற்றது.

1872 – 1876 காலப்பகுதி

இக்கால கட்டத்தில் கல்லூரி தளிர் நடை போட்டு மெல்ல மெல்ல முன்னேற ஆரம்பித்தாலும், கல்லூரியின் நிதி நிலைமை அவ்வளவு திருப்திகரமானதாக இருக்கவில்லை. முதல் வருடத்தில் கிட்டததட்ட 30 மாணவர்கள் அங்கு கல்வி கற்றார்கள். 1876 ஆம் ஆண்டு சான்றிதழ் வழங்கும் பரீட்சைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் சமயம் மற்றும் நன்நடத்தை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. காலை – மாலை வேளைகளில் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. ஆரம்பத்தில் அதிபரைத் தவிர ஆசிரியர்கள் இருவர் அங்கு கடமையாற்றினார்கள். அக்கால கட்டத்தில் கல்லூரியை சர்வகலாசாலையுடன் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மெற்றிக்குலேஷன் பரீட்சைக்கு மாணவர்களைத் தோற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் கல்லூரியின் முதலாவது நூலகம் 300 நூல்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் பெருமளவான நூல்களை டாக்டர். கிறீன் வழங்கினார். பணம் சேர்க்கப்பட்டு ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது. அத்துடன் 08.06.1876 இல் பட்டப்படிப்புக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

1876 – 1889 காலப்பகுதி

கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம்1886 ஆம் ஆண்டு ஆனி மாதம் வரை அதிபராகக் கடமையாற்றிய ஹண்ட் (T.P.Hunt) சாவகச்சேரியில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தனது பதவியை இராஜினாமா செய்தார். 1876 – 1880 காலப் பகுதியில் 50 – 60 மாணவர்கள் அங்கு கல்வி கற்றதுடன், அத்தொகை படிப்படியாக 70 – 75 ஆக அதிகரித்தது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக மாணவர் 20 அதிகரித்தார்கள். கல்லூரியில் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்ற டாக்டர் ஹஸ்ரிங் (Hasting) தனது காலத்தில் அத்தொகையை 350 ஆக உயர்த்தினார். கல்லூரியானது அதுவரை காலமும் 24 ஆசிரியர்கள், 07 மத போதகர்கள், 04 மதப் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள், 05 வழக்கறிஞர்கள் 28 அரச உத்தியோகத்தர்கள் அடங்கலாக 86 பட்டதாரி மாணவர்களை உருவாக்கியது. 1881 ஆம் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளில் பிரதான மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. அதுவரை காலமும் நான்கு வருடங்களாக நடைமுறையில் இருந்த கற்கைநெறி ஐந்து வருடங்களாக மாற்றப்பட்டதுடன், அவ்வாண்டு மாணவர்கள் எவரும் பட்டம் பெற்று வெளியேறவில்லை. 1876 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து தமது முதலாவது சஞ்சிகையை (Misellany) வெளியிட்டார்கள். மேலும் 1888 ஆம் ஆண்டு கல்லூரியில் வை.எம்.சி.ஏ (Y.M.C.A.) ஸ்தாபிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் கல்லூரி நூலகத்தில் இருந்த நூல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரமாக உயர்ந்தது. அதுதவிர கல்லூரியின் ஒட்லி (Ottley) மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்கன் மிஷனரியின் 4000 நூல்களையும் படித்துப் பயன் பெறக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது. 1888 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் பிரதம நீதியரசர் சேர். ஜோன்பர் (Johnpher) கல்லூரிக்கு விஜயம் செய்ததுடன், சில நாட்களின் பின்னர் இலங்கை ஆளுனர் ஜேம்ஸ் லோங்டென் (James Longden) கல்லூரிக்கு விஜயம் செய்தார். இவ்வாறாக கிட்டத்தட்ட 19 வருடங்கள் கல்லூரி தனது சொந்தப் பாதையில் வெற்றி நடைபோட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் இருந்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு குறிப்பாக இந்தியா உட்பட இலங்கையில் வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. 1889 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது 17 வருட கால கல்விச் சேவையை முடித்துக் கொண்டு டாக்டர் ஹஸ்ரிங்ஸ் (Hasting) தனது பதவியை இராஜினாமா செய்தார்.

1891 – 1897 சர்வகலாசாலை இணைப்பு

டாக்டர் பூவர், டாக்டர் ஹொசிங்டன் (Hoisington) மற்றும் டாக்டர் ஹஸ்ரிங் (Hasting) ஆகியோர் கல்லூரியின் வெற்றிக்கு அயராது உழைத்தவர்கள். அவர்கள் வழியில் டாக்டர் ஹௌலண்ட் (Howland) 1889 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதை இந்திய சர்வகலாசாலையுடன் இணைக்கும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். ஆனாலும் இந்தியக் கலாசாலையில் உள்ள குறைபாடுகளைத் தெரிந்திருந்து வைத்திருந்த காரணத்தால் சிலோன் சர்வகலாசாலையுடன் கல்லூரியை இணைக்க பின்னர் விரும்பினார். 1890 இல் ஆளுனர் சேர் ஹவ்லொக் (Sir Arthur Havelock) கல்லூரிக்கு விஜயம் செய்த வேளையில் அதற்கான பிரேரணையை அவரிடம் முன்வைத்தார். அதற்கு ஆளுனர் “தான் இலங்கையில் இருக்கும் காலத்தில் அவ்வாறு நடைபெற்றால் திருப்தியடைவேன்” எனக் கூறினார். ஆளுனர் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டு சில வாரங்களுக்குப் பின்னர் குடியேற்ற நாடுகளின் செயலாளரிடம் இருந்து “கல்லூரியின் கல்வித் தரத்தை உயர்த்தினால் உங்கள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற செய்தி கிடைத்தது. ஆகவே கல்லூரியின் 19 வருட கால உழைப்பிற்கு உள்நாட்டில் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் இந்தியாவில் இருந்த முதன்மை சர்வகலாசாலையான மெட்றாஸ் பல்கலைக்கழகத்துடன் அதை இணைக்கும் நடவடிக்கைகளை ஹௌலண்ட் மேற்கொண்டார். ஆனாலும் அக்கால கட்டத்தில் இலங்கையில் இருந்த பல கல்லூரிகள் கல்கத்தா சர்வகலாசாலையுடன் இணைக்கப்பட்டிருந்தன. அதனால் பொது ஆலோசப் பணிப்பாளரான குல் (Cull) அவர்கள் கல்கத்தாவுடனேயே இணைக்க விரும்பினார். 1891 தொடக்கம் இடைநிலைத் தரமும், 1893 தொடக்கம் பி.ஏ. தரமும் கல்கத்தாவுடன் இணைக்கப்பட்டது. கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 21 வருடங்கள் கடந்த நிலையில் அது சிறந்த கல்வி நிறுவனமாக அடையாளம் பெற்றது. மேலும் 1891 ஆம் ஆண்டு மத்தியில் கல்லூரி சர்வகலாசாலை மட்டத்துக்கு தரம் உயர்ந்தது. கல்லூரிக்கான அனுமதி வேண்டி 1894 ஆம் ஆண்டு மே மாதம் 123 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தபோதும் 59 மாணவர்கள் மாத்திரம் தேர்வு செய்யப்பட்டு கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஐவருடன் கல்லூரியில் பி.ஏ. வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரி கால் நூற்றாண்டைக் கடந்து வெற்றி நடை போட்டது.

1897 – 1908 இரண்டாம் கட்ட சர்வகலாசாலை இணைப்பு

1899 ஆம் ஆண்டு ஹிட்ச்ஹொக் (W.E. Hitchcock) கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றார். 1892 – 1906 ஆண்டுக்கு இடைப்பட்ட 15 வருட காலப் பகுதியில் பட்டப்படிப்பு நுழைவுத் தேர்விற்கு அனுப்பப்பட்ட 413 மாணவர்களில் 22 முதற்தர சித்தி உட்பட 201 மாணவர்கள் சித்தியடைந்தார்கள். 1907 ஆம் ஆண்டு கல்க்கத்தா சர்வகலாசாலையுடனான இணைப்பு நிறுத்தப்பட்டு, மெட்றாஸ் சர்வகலாசாலையுடன் கல்வி நடவடிக்கைகள் தொடரப்பட்டன. மேலும் அக்கால கட்டத்தில் கேம்பிரிட்ஜ் பரிட்சைகளும் ஆரம்பிக்கப்பட்டன. 1904 ஆம் ஆண்டு அமெரிக்கன் மிஷன் சபை கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டது. கிட்டத்தட்ட 35 வருட காலமாக சொந்த வளத்தில் இயங்கிய கல்லூரி 1908 ஆம் ஆண்டு உதவி பெறும் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.

1908 – 1915 காலப்பகுதி

மேற்குறிப்பிடப்பட்ட கால கட்டத்தில் இலங்கையில் பி.ஏ. கல்வி வழங்கும் ஒரே ஒரு கல்லூரி என்ற பெருமையை யாழ்ப்பாணக் கல்லூரி தட்டிக் கொண்டது. 1909 ஆம் ஆண்டு மெட்றாஸ் சர்வகலாசாலை பரீட்சைகள் நிறுத்தப்பட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பரீட்சைகள் நடத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் பரீட்சைகளில் தமிழ் மொழிக்கு இடம் கிடைக்காவிட்டாலும் உயர் வகுப்புக்களில் தமிழ் மொழியும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது. 1911 தொடக்கம் மெட்றாஸ் சர்வகலாசாலையுடனான சகல தொடர்புகளும் நிறுத்தப்பட்டன. 1910 காலப் பகுதியில் கல்லூரியானது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்காக மாணவர்களைத் தயார்ப்படுத்தியது. 1913 ஆம் ஆண்டில் மிஷனுக்கு முன்னுரிமை என்ற நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு கல்லூரி கட்டமைப்பு மாற்றம் பெற்றது. மேலும் மாணவர்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இக்கால கட்டத்தில் ‘சுப்பிரமணியம் வள்ளியம்மை’ புலமைப் பரிசில் நிதியம் ஆயிரம் ரூபாவுடன் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் 1913 ஆண்டு கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் பாடசாலையைப் பொறுப்பேற்ற அதிபர்கள் கல்லூரியை முன்னேற்றுவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டார்கள். அவர்களுக்கு ஆசிரியர்கள் அனைவரும் பக்க பலமாக இருந்து உதவினார்கள். தமது பிரதேசத்தின் கல்வித் தேவையை கருத்தில் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட கல்வி ஸ்தாபனம் வளர்வதையே அவர்கள் தமது பிரதானமான குறிக்கோளாகக் கொண்டு இயங்கினார்கள். அதன் பலனாக கல்லூரியும் சிறப்பாக வளம் பெற்றது. அங்கு கற்ற மாணவர்களும் கருத்துடன் தமது கல்வியைக் கற்று சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணக் கல்லூரியும்

இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், தேவையும் மிக நீண்ட காலமாகவே இருந்தது. திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு வேறு இடங்கள் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு பல தரப்பினராலும் முன்மொழியப்பட்டது. கொழும்பில் ‘நாவலர் மண்டபம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டைருந்த கல்வி நிறுவனம் தமிழ் இளைஞர்களின் கல்வித் தேவையை நிறைவேற்றியது. இதேவேளை அக்காலத்தில் பேராதனை, கொழும்பு, வித்தியோதயா மற்றும் வித்தியலங்கார ஆகிய பல்கலைக்கழகங்களை அரசாங்கம் ஸ்தாபித்திருந்தது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் திருநெல்வேலியில் நிறுவப்பட்டு, இராமநாதன் நம்பிக்கை நிதியத்தின் பொறுப்பில் அப்பொழுது இருந்த பரமேசுவராக் கல்லூரி பலராலும் சிபார்சு செய்யப்பட்டது. ஆனாலும் பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பதற்கு ஒரு கல்வி நிறுவனம் மாத்திரம் போதாது என அரசு நினைத்தது. இரு மொழிகளிலும் கல்வி கற்பித்தல், கலைத்துறை மாத்திரமல்லாமல் விஞ்ஞானத்துறையையும் உள்வாங்கல் என்பன அரசின் முக்கிய குறிக்கோள்களாக இருந்தன.

வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த யாழ்ப்பாணக் கல்லூரி வளவில் அமைந்திருந்த பட்டதாரி மாணவப் பிரிவையும், 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் திருநெல்வேலியில் நிறுவப்பட்ட பரமேசுவராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம் 1974 ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. ஆகவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் என்றே அழைக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு உயர் கல்விச் சட்டத்தின் மூலமாக இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக பேராசிரியர் சு. வித்தியானந்தன் நியமிக்கப்பட்டார்.

கல்லூரியின் பழைய மாணவர்கள் பலரும் உலகின் பல பாகங்களிலும் வைத்தியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியியலாளர்களாகவும், இன்னும் இன்னும் பல துறைகளிலும் சிறந்து விளங்கி கல்லூரிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இடம்பெயர்ந்த கல்லூரி, பல இன்னல்களைச் சந்தித்து, தற்போது மீண்டும் தனது சொந்த இடத்தில் கல்விச் சேவையைக் கல்லூரி ஆற்றிவருகிறது. தற்போதும் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரியானது அப்பிரதேச மாணவர்களுக்கு உயர்ந்த தரத்திலாலான கல்வியை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. காலத்துக்குக் காலம் பாடசாலையைப் பொறுப்பேற்ற அதிபர்கள், அங்கு கடமையாற்றிய ஆசிரியர் மற்றும் நலன்விரும்பிகள் முதலியோரால் என்றும் அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை குறைவற்று வழங்கும் ஸ்தாபனமாக அக் கல்லூரி விளாங்குகிறது என்றால் அது மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here