புவியியல் தகவல் முறைமை (GIS)

0
40

புவியியலில் ஏற்படுத்தப்பட்ட புரட்சி புவியியல் தகவல் முறைமை மற்றும் தொலையுணர்வு தொழில்நுட்பம் ஆகும். விடை காணமுடியாத பல பிரச்சனைகளுக்கு புதிய கோணத்தில் தெளிவாகவும் சரியாகவும் விடை காண்பதற்கு புவியியல் தகவல் முறைமை(GIS) மற்றும் தொலையுணர்வு தொழில்நுட்பம்(Remote Sensing) துணைபுரிகின்றது. அனைத்து புவியியல் சார்ந்த தரவுகளை பெற்றுக்கொள்ளுதல், சேமித்து கொள்ளுதல், கையாளுதல், பகுப்பாய்வு செய்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிப்படுதல் போன்றவற்றுக்காக மென்பொருள், வன்பொருள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்ட ஒரு முறைமையாக GIS காணப்படுகின்றது.

கைத்தொழில் துறையின் பிந்திய ஒரு யுகமாகவே புவியியல் தகவல் முறைமை காணப்படுகின்றது. 18ஆம் , 19ஆம் நூற்றாண்டு காலங்களில் புவியியலாளர்கள் , நாடுகாண் பயணங்களில் ஈடுபட்டோர் , மாலுமிகள் போன்றோர் படத்தினை ஆதாரமாக கொண்ட தகவல்களினை சேகரித்தனர். இவை தரம் கொண்டதாக இல்லாமல் பண்பு சார்ந்ததாகவே காணப்பட்டது. 1960ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடஞ்சார் தகவல்கள் மனித முயற்சிகளினால் தாளில் வரையப்பட்ட படங்களாக காணப்பட்டன. இவற்றில் உண்மை தன்மை குறைந்ததாகவும், துல்லியமாக வரைவதற்கு அதிக செலவாகவும், மாற்றம் செய்ய முடியாததாகவும் வேறு படங்களோடு ஒப்பிட முடியாததாகவும் காணப்பட்டது.

1960ஆம் ஆண்டுகளின் கணனி பயன்பாடு வந்ததன் பின்னர் சேகரிக்கப்பட்ட தகவல்களை கொண்டு இடம்சார்ந்த பகுப்பாய்வுகளை மேற்கொள்ளக்கூடிய முறைகள் புவியியல் தரவுகளை பாடமாக்கும் முறை உருவாக்கப்பட்டது. இதுவே பிற்பட்ட காலத்தில் புவியியல் தகவல் முறைமை மென்பொருளாக(GIS Software) வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது.

புவியியல் தகவல் முறைமையானது இடம்சார் தரவுகள், பண்புசார் தரவுகள் எனும் 2 வகையான தாரவுகளினை கொண்டுள்ளது. இடம்சார் தரவுகள் வெக்டர் தரவுகள்(Vector Data)  மற்றும் ராஸ்டர் தரவுகள்(Raster Data) எனும் 2 வகைகளாக பாகுபடுத்தப்படுகின்றன. பண்புசார் தரவுகள் எனும்போது இடம்சார் தரவுகள் அல்லாத அனைத்தினையும் பண்புசார் தரவுகளாக குறிப்பிட்டு கொள்ளமுடியும். குறிப்பாக குடித்தொகை தரவுகளினை குறிப்பிட்டு கொள்ளலாம்.

வெக்டர் தரவுகள்(Vector Data)

வெக்டர் தரவுகள் புவிமேற்பரப்பு பொருட்களை புள்ளி, கோடு மற்றும் பரப்பு போன்ற அடிப்படை மூலகங்கள் மூலம் பிரதிபலிப்பினை குறிக்கும். இம்மாதிரியில் காணப்படும் ஒவ்வொரு மூலகங்களும் அகலநெடுங்கோட்டினால் வரையறுக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் விபரிக்கப்பட்டு காணப்படும். இதில் புள்ளி , கோடு , பரப்பு போன்றவை புவியியல் தகவல் தொகுப்பில் காகித வரைபடத்தில் பயன்படுத்தப்படும். இவை தளபரிமாணமாகவும் முப்பரிமானாகவும் GISஇல் பயன்படுத்தப்படுகின்றன.

வெக்டர் தரவுகளின் பண்புகள்

  • இது சாராதரண தாள் படங்களினை போல காணப்படும்.
  • முழுமையான இடவிளக்கவியல்  அம்சங்களினை அமைக்க உதவும்.
  • இது இலகுவில் மக்களுக்கு விளங்கி கொள்ள கூடியதாக காணப்படுகின்றது.
  • இங்கு சேமித்து வைத்தல் இலகுவானதாகும்.
  • ஏற்கனவே உருவாக்கிய தரவுகளினை மிக விரைவாக மீள்தரவாக்குதல் , மீளமைத்தல் போன்ற செயற்பாடுகளை மிக சுலபமாக செய்துகொள்ள முடியும்.

ராஸ்டர் தரவுகள்(Raster Data)

ராஸ்டர் தரவு என்பது சமனான இடைவெளி மற்றும் சமனான அளவுடைய ராஸ்டர் சதுர அலகினால் புவி சார் தரவுகளை பிரதிபலிப்பதாகும். ராஸ்டர் அலகு சதுரமாக காணப்படும். நிரல் , நிரை வரிசைகளை உள்ளடக்கிய Pixels களை கொண்டு புவிசார் மற்றும் பண்புசார் தரவுகளை உள்ளடக்கி காணப்படும். ஒரு Pixel ஆனது ஒரு ராஸ்டர் படத்தின் வண்ண ஆழத்தில் தரவுகளை கொண்டிருக்கும். இந்த தரவு பெறுமதியானது ஒரு நிறத்தின் அல்லது சாம்பல் நிறத்தின் பெறுமதி, ஆழம் அல்லது உயரம் , அளவீடு அல்லது நிலமேற்பரப்பு வகைப்பாடு குறியீடு போன்ற கருப்பொருளின் பெறுமதியினை பிரதிநிதித்துவபடுத்த கூடியதாக காணப்படும்.

ராஸ்டர் தரவின் பண்புகள் 

  • இலகுவில் எல்லோராலும் விளங்கி கொள்ளக்கூடிய தாரவுகளினை கொண்டுள்ளது.
  • முப்பரிமாண படங்களினை அமைக்க உதவும்.
  • சில முக்கிய பகுப்பாய்வுகளினை இலகுவில் செய்ய கூடியதாக இருக்கும். ஒன்றின்மேல் ஒன்றாக படைகளை இணைத்து பகுப்பாய்வுகளினை மேற்கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here