மண்ணின் கட்டமைப்பு -மாணவர்களுக்கானதும் பகிரப்படவேண்டியதும்.

0
46

பூகோள மேற்பரப்பில் காணப்படுகின்ற பாறைப்படைத்தளங்கள் உருவிக்காரணிகளின் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டு அவை காலப்போக்கில் சிதைவடைந்து அதன் பிரகாரம் தோற்றம் பெறுகின்ற அசேதன பொருட்களும், சேதனப்பொருட்களும் ஒன்றிணைந்து ஒரு முப்பரிமாணத்தினை தோற்றுவிக்கும். இவ்வாறான தோற்றத்தினை மண் என அழைத்துக்கொள்ளுவார்கள். மண்ணினுடைய குறுக்கு வெட்டு முகத்தோற்றத்தினை பிரதானமாக 4 பெரும் கட்டமைப்பாக பாகுபாடு செய்துகொள்ளலாம். Aபடை, Bபடை,  C படை, Dபடை போன்றனவாகும்.

Aபடை

மண்ணினுடைய கட்டமைப்பிலே முதன்மையானதாக அமைந்து காணப்படுகின்ற ஓர் படையினை Aபடை  என அழைத்துக்கொள்ளுவார்கள்.   இதனை மேல்மண் படை எனவும் அழைப்பார்கள். இவ் Aபடையினை பிரதானமாக 3 பெரும் பிரிவுகளாக மேலும் பாகுபாடு செய்துகொள்ளலாம். அவையாவன:

  • AOபடை
  • A1படை
  • A2படை

AOபடை 

மேல்மண் படையின் ஓர் பிரிவான இதில் இறந்த தாவரங்களது உடற்கூறுகள் , விலங்குகளது கழிவு பதார்த்தங்கள் உள்ளிட்ட பல வேறுபட்ட விதமான சேதன, அசேதன பொருட்கள் போன்றன ஒன்றிணைந்து காணப்படும் ஓர் படை அமைப்பாக இந்த படை காணப்படுகின்றது. இதனால் இந்த படைத்தளம் கறுப்பு அல்லது கபிலநிறமாக காட்சியளிக்கும்.

A1படை 

மண்ணின் குறுக்குவெட்டு தோற்றத்தில் A0 படையினை அடுத்து காணப்படுகின்ற ஓர் பிரதான படையமைப்பாக இது விளங்குகின்றது. இவ் A1 படையமைப்பில் AO படையில் உள்ள பருப்பொருட்கள் காலப்போக்கில் இப்படையினுள் ஊடுருவுகின்ற போது இங்குள்ள உயிரியற்காரணிகள் அவற்றை பிரிகையாக்கம் அடையச்செய்து கனிப்பொருட்களாக அல்லது கனியுப்புக்களாக அவ் உக்கல்களை மாற்றமடைய செய்து தாவர வேர்களின் வளர்ச்சிக்கு கணிசமான பங்காற்றி வருகின்றது.

உக்கல்களினினுடைய செறிவுத்தன்மை ஒப்பீட்டளவில் அதிகமாய் உள்ளதனால் இப்படைத்தளம் கறுப்பு அல்லது கபிலநிறமாகவே காட்சியளிக்கும்.

A2படை 

A படையிலே இறுதியாக அமைந்து காணப்படுகின்ற ஓர் படையமைப்பாக இது விளங்குகிக்கின்றது. இப்படையிலே இரும்பு, அலுமினியம், உப்புக்கள், சிலிக்கா மணல் போன்ற பல்வேறுபட்ட கனியுப்புக்கள் இங்கு அதிகம் காணப்படுவதோடு காலப்போக்கில் அவை கரைசல் நிலைக்கு உட்பட்டு அலுமினியம், இரும்பு, உப்புக்கள் போன்றன Bபடையினுள் இறங்க சிலிக்கா மணல் மட்டும் அக்கரைசலினை எதிர்த்து நிற்கும் தன்மை வாய்ந்ததாக காணப்படும்.

இவ்வாறு இப்படையினுள்ள பிரதான கனியுப்புக்கள் கரைசல் நிலைக்குள்ளாக்கப்படுவதால் இவ் Aபடை வெளிறிய நிறத்தில் காட்சியளிக்கும்.

Bபடை

மண்ணின் குறுக்குவெட்டு முகத்தோற்றத்தில் Aபடையினை அல்லது மேல்மண் படையினை அடுத்து காணப்படும் பிரதான படையாக இந்த உபமண் படையானது அமைந்து காணப்படுகின்றது. இப் படையிலே A2படையில் இருந்து கொண்டு வரப்பட்ட கனியுப்புக்கள் படியவிடப்படுகின்ற காரணத்தினால் இப்படையானது சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். இவ் Bபடையினை B1, B2 ,B3 என மேலும் 3 வகையாக பாகுபாடு செய்து கொள்ளலாம்.

C படை

மண்ணின் கட்டமைப்பிலே உபமண் படையினை அடுத்து காணப்படுகின்ற ஓர் பிரதான படையாக இது காணப்படுகின்றது. இப்படை தாய்ப்பாறையினை மூடியுள்ள காரணத்தினால் அதனை மூடுபடை என்றும் அழைத்துக்கொள்ளுவார்கள். இப்படையே வானியல் அழிதல் செயற்பாடுகளுக்கு அதிகம் உள்ளாகின்ற ஓர் படையமைப்பாகவும் காணப்படுகின்றது.

Dபடை

மண்ணின் கட்டமைப்பிலே இறுதியாக அமைந்து காணப்படுகின்ற ஓர் படை அமைப்பு இதுவாகும். மூடுபடையினை அடுத்து இது காணப்படுவதுடன் வானிலையால் அழிதல் செயற்பாடுகள் இங்கு நடைபெறுகின்ற விகிதாசார அளவுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here