இது கல்லறைக்குள் உலகம்! போய் வரலாமா?

வியக்கவைக்கும் அறிவியலும்,நம்பமுடியாத அமானுஷ்யங்களும் ஒன்றாக கலக்கும் எதுவுமே நமக்கு ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் கொடுப்பவையே.

அது போன்ற ஒரு ஆச்சர்யம் தான் எகிப்தின் மம்மிகள்.ஒவ்வொரு கல்லறையின் பின்னாலும் எத்தனை எத்தனை வரலாறுகள், (கட்டு)கதைகள்,வினோதங்கள்? 3௦௦௦ ஆண்டுகள் ஆகியும் சிதையாமல் இருக்கும் உடல்,இன்னமும் மணம் மாறாமல் இருக்கும் வாசனை திரவியம் என பண்டைய எகிப்தியர்களின் அறிவியல் சார்ந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் நம் புருவத்தை சற்றே உயர்த்திவிடும்,’’மரணத்திற்கு பின் இன்னொரு வாழ்க்கை உண்டு” என்பதில் எகிப்தியர்கள் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தனர், இதன் வெளிப்பாடு தான் இந்த மம்மிகள்..மண்ணில் தோண்டி எடுத்த மம்மிகள் கூறும் வரலாற்றையும், பண்டைய எகிப்திய கலாச்சாரங்களையும் அறிந்து கொள்ள வாருங்கள், இந்த கல்லறை உலகிற்கு…!!

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் மம்மிகளை தேடி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தை குடைந்து கொண்டிருந்தனர்.அவர்களுள் முக்கியமானவர்கள் இங்கிலாந்தை சேர்ந்த டேவிஸ்(DAVIS) மற்றும் கார்ட்டர்(CARTER). 1902ம் ஆண்டு VALLEY OF KINGS பகுதியில் மம்மிக்களை தேடும் பணியை ஆரம்பித்த டேவிஸ், 1902 முதல் 1907 வரை அவர் கிட்டத்தட்ட முப்பது மம்மிக்களை கண்டுபிடித்தார்.

ஆனால் அதில் இருந்த பொக்கிஷங்கள் அனைத்துமே கொள்ளையர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொள்ளையடிக்கப்பட்டும், கல்லறைகள் சிதைக்கப்பட்டும் இருந்தது. 1907 ம் ஆண்டு டேவிஸ் தங்கத்தகடு ஒன்றை கண்டுபிடித்தார்.அதில் ‘’மன்னர் டுத்தாங்கமென்’’ (KING TUTANKHAMEN) என்று எழுதப்பட்டிருந்தது.

இதனால் டுத்தாங்கமென் என்ற மன்னனின் கல்லறை இந்த பகுதியில்தான் இருக்கவேண்டும் என்றும்,அதில் இதுவரை கிடைத்திராத பொக்கிஷங்கள் இருக்கலாம் என்ற புதுத்தெம்புடன் மீண்டும் தோண்ட ஆரம்பித்தார்.. டுத்தாங்கமென் பெயர் பொறித்த துணிகள், ஆபரணங்கள் என்று கிடைத்த வண்ணம் இருந்தன,ஆனால் கல்லறை தான் கிடைத்தபாடில்லை.மூன்று கால்பந்து மைதானம் அளவுள்ள நிலத்தை 25 அடி ஆழதிற்கு வேலையாட்களை விட்டு தொண்டசெய்தார் டேவிஸ்.இறுதியில் இங்கு ஒன்றுமே இல்லை என்று 1914 ம் ஆண்டு ஏமாற்றத்துடன் இங்லாந்திற்கே சென்றுவிட்டார்.

அடுத்து இங்கு வந்தவர்தான் கார்ட்டர்.இந்த இடத்தில நிச்சயம் எதோ ஒன்று இருக்கவேண்டும் என்று அவரது மனபட்சி சொல்லியது போல..1917 முதல் டேவிஸ் விட்டதை கார்ட்டர் தொடர்ந்தார்..கார்ட்டரின் இந்த தேடுதலுக்கு ஆகும் செலவு அனைத்தையும் அவரது நண்பர் கார்நோவன் ஏற்றார்.1918 ல் ஏமாற்றம்,1919 ஏமாற்றம்,1920 ஏமாற்றம்,1921 ஏமாற்றம்.

இதுவரை ஒரு மண்ணும் கிடைக்காததால் நொந்து போன…மன்னிக்கவும்…’மண்ணைத்தவிர வேறேதும் கிடைக்காததால் நொந்து போன’ கார்நோவன் இதற்கு மேல் இந்த வெட்டி வேலைக்கு பணம் தரமுடியாது என்று இங்கிலாந்ததிலிருந்து தந்தி அனுப்பிவிட்டார்.ஆனால் கார்ட்டருக்கு ஏதோ ஒரு அசாத்திய நம்பிக்கை இருந்ததது.கார்நோவனை சந்தித்து இன்னும் ஒரு வருடம் மட்டும் உதவும் மாறும்,அப்படி இந்த வருடத்தில் எதுவும் கிடைக்கவில்லையென்றால் இதுவரை ஆன மொத்த செலவுக்கான பணத்தையும் எப்படியாவது திருப்பி தந்துவிடுவதாகவும் கூறிவிட்டு வந்தார் கார்ட்டர்.

”டுத்தாங்கமெனை தேடுகிறார்கள்”

இதனால் வேலையாட்களை மேலும் துரிதமாக தோண்டசெய்தார். நவம்பர் 4,1922…வேலையாட்களுக்கு தண்ணீர் கொடுக்க சென்ற ஒரு சிறுவன் பள்ளம் தோண்டும் பகுதிக்குள் இறங்கினான்.அப்போது கால் இடறி அவன் கீழே விழ,விழுந்த இடத்தில் ’டங்’ என்று நூதன ஒலி எழுந்தது.அவன் அந்த இடத்தை மெல்ல துடைத்து பார்த்தான்.எதோ அதில் எழுதிருந்தது..உடனே அந்த சிறுவன் ஓடி போய் வேலையாட்களிடம் கூற,அவர்கள் கார்ட்டரிடம் தெரிவித்தனர்.அவ்வளவுதான் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார் கார்ட்டர்.

மெல்ல மெல்ல அந்த பகுதியை துடைத்தனர்.இறுதியில் ஒரு கதவு வெளிப்பட்டது,அதில் ‘’ டுத்தாங்கமென் ’’ என்று எழுதியிருந்தது.அந்த கதவில் துளையிட்டு திறந்தார் கார்ட்டர். திறந்தவுடன் ஒரு குகை ஆரம்பித்தது..சிறிது சிறிதாக,மிக கவனமாக குகையை குடைந்தனர், 22 நாட்களுக்கு பிறகு ,நவம்பர் 26 ல் மற்றுமோர் கதவு வெளிப்பட்டது. இரண்டுகதவுகளுக்கும் இடையேயான தூரம் 30m.

இரண்டாவது, கதவிலும் ‘’ டுத்தாங்கமென் ’’ என்று எழுதியிருந்தது.கார்ட்டர் எதிர்பார்த்ததும், எதிர்பார்க்காததும் இந்த இரண்டாம் கதவின் பின்னால் இவர்களுக்காக காத்திருந்தன.