2021-ம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் மீண்டும் மைத்திரி!

ஜனாதிபதி தேர்தலில் தான் இனிமேல் போட்டியிடமாட்டேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிட வைப்பதற்கு, கட்சி பரிந்துரைக்கவுள்ளதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இனிவரும் காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தலின் பொதுவேட்பாளராக யாரையும் பரிந்துரைப்பதற்கு, தங்களுக்கு யோசனை இல்லை” என்றார்.

இது தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டு ஆராயப்படும் என்றும் எங்களுடைய ஆதரவு அவருக்கு இருக்கின்றமையால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த யோசனைக்கு ஒத்துக்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

“நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களிடமிருந்தும் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு ஜனாதிபதி என்றால், அது மைத்திரிபால சிறிசேனவே. அவருக்கு சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு அதிகளவில் உள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பி, 6.2 சதவீதமான மக்கள் வாக்களித்தனர்.

அவர் எதிர்வரும் 5 ஆண்டு காலத்துக்கு நாட்டை நல்லதொரு முறையில் வழிநடத்துவார் என்று அனைவரும் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடும் போது, நிச்சயமாக அவரை வெற்றியீட்டச் செய்வோம்” என்று இதன்போது அவர் கூறினார்.

“அப்படியாயின், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இனிவரும் காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருப்பதற்கு எண்ணமில்லை என்று, ஜனாதிபதியால் அளிக்கப்பட்ட உறுதி என்னவாயிற்று” என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதன்போது பதிலளித்த எம்.பி தயாசிறி ஜயசேகர, “அது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்தரக்கட்சியின் தலைவராவதற்கு முன்னர் எடுத்த தீர்மானமாகும்.

சு.க வை முன்னேற்றிச்செல்லும் பொறுப்பு அவருக்கு உண்டு என்பதை அவர் அறிந்துகொள்ள வேண்டும்.

அது மாத்திரமன்றி, 2021-ம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலை அவர் புறக்கணிப்பதற்கு முன்னர், இலங்கை தொடர்பில் அவருக்குள்ள பொறுப்பு பற்றி அவர் சிந்திக்கவேண்டும்.

எமது கட்சியை வெற்றிகரமான பாதையில் இட்டுச் செல்வதற்கு, அவருடைய ஆதரவு எங்களுக்கு நிச்சயம் தேவை” என்று தெரிவித்துள்ளார்.