2017 ஆம் ஆண்டின் “சிறந்த நபருக்கான விருது” இவருக்கே!

இந்தோனேஷியாவில், சிரித்தபடி, ‘போஸ்’ தந்து, ‘செல்பி’ எடுத்துக் கொண்ட குரங்கு, ‘இந்தாண்டின் சிறந்த நபர்’ என்ற விருதுக்குரியதாக, ‘பீட்டா’ எனப்படும், விலங்குகள் உரிமை குழுவால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தோனேஷியாவில், சுலவெஸி தீவில், 2011ல், ‘நருடோ’ என, பெயரிடப்பட்ட, ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ இன குரங்கு ஒன்று, கேமராவின் லென்சை பார்த்து சிரித்தபடி, ‘செல்பி’ எடுத்து அசத்தியது. அந்த புகைப்படம், உலகம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது.
குரங்கு எடுத்த புகைப்படத்துக்கு, பிரிட்டன் புகைப்பட கலைஞர், டேவிட் ஸ்லேட்டர் உரிமை கொண்டாடினார். ‘குரங்கு, புகைப்படம் எடுக்க தேவையான வசதிகளை, தான் செய்து தந்ததால், அது எடுத்த புகைப்படம் தனக்கே சொந்தம்’ என, அவர் கூறினார்.
ஆனால், அந்த புகைப்படத்துக்கு, உரிமையாளர், நருடோ மட்டுமே என, அறிவிக்கக் கோரி, பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது. குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு, மனிதர் அல்லாத உயிரினத்தை, உரிமையாளராக அறிவிக்கக் கோரிய அந்த வழக்கு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
இறுதியில், அந்த புகைப்படம் மூலம் கிடைக்கும் வருவாயில், 25 சதவீதத்தை, ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ குரங்கினத்தை பாதுகாக்க நன்கொடையாக அளிப்பதாக, டேவிட் ஸ்லேட்டர் ஒப்புக் கொண்டார். இதனால், அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ‘இந்தாண்டின் சிறந்த நபர்’ என்ற விருதுக்கு, நருடோ குரங்கை, பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.