முன்னால் பிபா தலைவர் மீது வீராங்கனை பாலியல் குற்றம்…

முன்னாள் பிபா தலைவர் செப் பிலாட்டர், தனது பின் பகுதியை அமுக்கியதாக அமெரிக்க கால்பந்து வீராங்கனை ஹோப் சோலோ புகார் அளித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபாவின் முன்னாள் தலைவர் செப் பிலாட்டர், 81. இவர் கடந்த 1998 முதல் 2015 வரை போட்டியில்லாமலே தலைவராக சுமார் 17 ஆண்டுகள் நீடித்து ஆதிக்கம் செலுத்திவந்தார்.

பின் இவர் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து கடந்த 2015ல் சுமார் 8 ஆண்டுகள் எவ்வித கால்பந்து ஈடுபாட்டிலும் இருக்க கூடாது என தடைவிதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின் கடந்த 2016ல் இந்த தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2013ல் நடந்த பிபா சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில், பிலாட்டர் தனது பின் பகுதியை அமுக்கியதாக அமெரிக்காவின் நட்சத்திர கால்பந்து வீராங்கனை ஹோப் சோலோ தற்போது புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போர்ச்சுகல் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள ஹோப் சோலோ கூறுகையில்,’செப் பிலாட்டர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் என் பின்பகுதியை அமுக்கினான். ஹாலிவுட்டில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லை தொடர்கதையாக உள்ளது. ஆனால் இதுகுறித்து பிற வீராங்கனைகள் ஏன் மௌனமாக உள்ளனர் என புரியவில்லை. அவர்களும் தைரியமாக இதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பிலாட்டர் தரப்பு மறுத்துள்ளதோடு, மிகவும் வேடிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.