வெற்றிலையுடன் இருபது ரூபாய் தாள்களை சாப்பிட்ட விநோத சம்பவம்!

வெற்றிலையுடன் சேர்த்து இரண்டு 20 ரூபாய்த் தாள்களையும்  சாப்பிட்ட விநோத சம்பவம் ஒன்று ஹெம்மாதகம பிரதேசத்தில் நேற்று பதிவாகியுள்ளது.
ஹெம்மாதகம பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வெற்றிலை வாங்கிய ஒருவருக்கு மீதிப்பணமாக இரண்டு இருபது ரூபாய்த் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெற்றிலையைப் பெற்றுக் கொண்டவுடன் வாயில் போட்டுக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்றபின்னர் அந்த நபருக்கு மீதிக்காசு பெறவில்லை என்ற சந்தேகம் எழுந்து, மீண்டும் அந்த வர்த்தகரிடம் சென்று தனக்கு மீதிக்காசு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மீதிப் பணத்தை திருப்பிக் கொடுத்ததாக வர்த்தகர் கூறிய போதிலும் அவர் மீதிக்காசு கிடைக்கவில்லை என்று வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடும் வாக்குவதம் இடம்பெற்றதையடுத்து அந்த நபருக்கு திடீரென இருமல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அவர் வாயில் இருந்து சப்பிய வெற்றிலையை துப்பிய போது, அதில் இருபது ரூபாய்த் தாள்கள் சிறு சிறு துண்டுகளாக வெற்றிலையுடன் கலந்து வந்துள்ளது.
அந்த நபர் வெற்றிலையுடன் சேர்த்து இருபது ரூபாய்த் தாள்களையும் சாப்பிட்ட இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை நகைப்புக்குள்ளாக்கியுள்ளது.