விமலின் கைதுக்கு இது தான் மிக முக்கிய காரணம்?

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட கைது அல்ல எனவும் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு சொந்தமான 40 வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி, நாட்டுக்கு 9 கோடியே 16 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்திய காரணத்திற்காகவே விமல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதில் எந்த விதமான அரசியல் பழிவாங்கல்களும் இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

விமல் வீரவங்சவின் அக்காவின் இளையமகன், மூத்தமகன், மனைவியின் அக்காவின் கணவர், தங்கையின் கணவர், விமலின் தங்கை என இந்த வாகனங்களை பயன்படுத்தியவர்களின் பட்டியல் ‘பீ’ அறிக்கையில் நீண்டு கொண்டே செல்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

அவர் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தபோது அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் 2014-ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட உள்ளக கணக்காய்வின் போது 40 வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் திகதி அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் இது தொடர்பாக முறைப்பாடு செய்தார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவிலேயே விமல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

1982 ஆம் ஆண்டு 12-ம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோகத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு 9 கோடியே 16 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்க அதிகாரிகளுக்கும் ஒரு சிறந்த பாடமாக அமையவேண்டும்.

காரணம் விசாரணையின் போது விமல் வாக்குமூலமளிக்கையில் தான் அமைச்சர் என்ற ரீதியில் உத்தரவுகளைப் பிறப்பித்ததாகவும் அது தவறு எனின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

அதிகாரிகளும் சுயாதீனமாக நடந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும் என பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.