விண்கலப் பெயர் பட்டியலில் இந்தியா 3-ம் இடம்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு ‘இன்சைட்’ என்ற ரோபோ விண்கலத்தை 2018-ம் ஆண்டு மே 5-ம் தேதி அனுப்ப திட்டமிட்டுள்ளது.  இதில் தங்களது பெயரை அனுப்பி வைக்க விரும்புகிறவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என நாசா கடந்த மாதம் அறிவித்திருந்தது.

 

இதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், “இன்சைட் விண்கலத்தில் தங்கள் பெயரை அனுப்பி வைப்பதற்காக 24 லட்சத்து 29 ஆயிரத்து 807 பேர் பதிவு செய்துள்ளனர்.

 

அதிகபட்சமாக 6,76,773 அமெரிக்கர்களும், 2,62,752 சீன நாட்டவர்களும், 1,38,899 இந்தியர்களும் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அதாவது இந்தப் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

 

அனைவருக்கும் இணையதளம் மூலம் போர்டிங் பாஸ் வழங்கப்படும். இந்த விண்கலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும்” என நாசா ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

முன்பதிவு செய்துகொண்டவர்களின் பெயர்கள் எலக்ட்ரான் பீம் உதவியுடன் சிலிகான் வேபர் மைக்ரோசிப்பில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த சிப்

விண்கலத்தின் மேல் ஓட்டில் இணைக்கப்படும்.

 

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்புக்குக் கீழ் உள்ள ஆழமான உட்பகுதி குறித்து ஆய்வு செய்யும். குறிப்பாக அங்கு நிகழும் பூகம்பங்களை பதிவு செய்யும்.