வலைத்தளம் எப்படி உருவானது தெரியுமா ?

வலைத்தளம் என்பது, (www- world wide web) இணையத்தின் வழியாக அணுகப்படும்,  ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஒரு வலை உலாவியைக் கொண்டு, செய்திகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற  பல்லூடகக் கூறுகளை, வலைப் பக்கங்களைக் காணவும், இணைப்புகளைப் பயன்படுத்தி  அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும்.

இதற்கு முன் உள்ள அடிப்படைகளைப் பயன்படுத்தி, 1989ம் ஆண்டு ஆங்கில  இயற்பியல் ஆய்வாளரும், உலகளாவிய வலைச் சங்கத்தின் இயக்குநருமான சர் டிம்  பெர்னெர்ஸ்-லீ என்பவர், உலகளாவிய வலையைக் கண்டறிந்தார்.  பின்னாளில், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள நிறுவனத்தில்,  இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த ராபர்ட் கயில்லியவ் என்ற பெல்ஜிய கணினி  விஞ்ஞானி இதற்கு உதவியாளராக இருந்தார்.

இவர்கள் 1990 ம் ஆண்டு ஒரு  இணையத்தில், ‘உலாவிகள்‘ மூலமாகக் காணக்கூடிய வகையில், ஏற்கனவே எடுத்த  தகவல்களையும் சேகரித்து வைக்கக்கூடிய ‘வெப் ஆஃப் நோட்ஸ்‘ என்னும்  அமைப்பிற்கான திட்டத்தை உருவாக்கி வெளியிட்டனர்.

உலகளாவிய வலையில், தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதாக  வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய  வலையானது, இணையத்தின் பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு  வகித்தது.
உலகளாவிய வலைத்தளம் மற்றும் இணையம் ஆகிய இரண்டு சொற்களும், வழக்கில் ஒரே  பொருள்படக் கூடியவையாகப் பயன்படுத்தப்பட்டாலும், உலகளாவிய வலைத்தளம் என்பது,  இணையம் என்ற சொல்லுக்குப் பொருள் ஆகாது. வலை என்பது இணையத்தில்  உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாடாகும்.