யாழ் நூலகத்திற்காக சேகரிக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் புத்தகங்கள்!

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்காக ஒரு லட்சம் புத்தகங்களை சேகரிப்பதற்கான பொதுப்பணியொன்று கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தமிழக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய இதுவரையில் 40 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக வாசகர்கள், பொதுக் கல்வி நிறுவனங்களிடமிருந்து புத்தகங்கள் கோரப்பட்டிருந்தன.
தற்போது சென்னை புத்தக கண்காட்சி இடம்பெற்றுவரும் நிலையில், அரசாங்கத் தரப்பில் இருந்து புத்தக வெளியீட்டாளர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் தீக்கிறையாக்கப்பட்டதால், அங்கு பாதுகாக்கப்பட்ட பழமையான சுவடிகள் உட்பட 90 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் அழிவடைந்தன.
இதனை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு மீண்டும் அந்த நூலகம் திறந்துவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுவரையில் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புத்தக வளத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.