யாழ் தேவியின் உண்மை வரலாறும் ஒரு வரி வரலாறும்!

கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் உறவுப்பாலமாக திகழ்ந்த யாழ்தேவி மீண்டும் இன்று தனது உறவினை புதுப்பித்துக் கொண்டது.

Image result for யாழ் தேவி

‘யாழ்தேவி’ ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது. இலங்கையின் வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றரக்கலந்திருந்த யாழ்தேவி என்ற இந்த ரயிலைப் பற்றி 90களுக்குப் பிந்திய இளம் சந்ததிக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.
காரணம் துரதிர்ஷ்டவசமாக 90ஆம் ஆண்டுடன் இந்த ரயில் யாழ்ப்பாணத்துக்கான தனது சேவையை நிறுத்திக் கொண்டது.

ஒரு காலத்தில் இலங்கையின் மிகப்பிரதான ரயிலாக இருந்ததும், இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ்ப்பாணத்தையும், கொழும்பையும் இணைக்கும் பாலமாக இருந்ததும் இந்த கடுகதி ரயில் தான்.

இதன் வரலாறும் இந்த ரயிலைப் போலவே கடுகதியானது.
பிரித்தானியர் கட்டுப்பாட்டில் இலங்கை இருந்த காலத்தில் 1864இல் முதன் முதலில் இலங்கைக்கு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1902இல் தான் யாழ்ப்பாணத்துக்கான சேவை தொடங்கியது.
இந்த ரயில் ஒவ்வொரு புகையிரத நிலையத்திலும் நின்று கடிதப் பொதிகளை ஏற்றிக்கொண்டு, கொழும்பு சென்று சேரும் நேரம் மிக அதிகம்.

மாலை 5 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்படும் இந்த தபால் ரயில் 10-15 நிமிடங்களுக்கு ஒரு தடவை வரும் சிறு சிறு புகையிரத நிலையங்களிலும் நின்று பொதிகளை ஏற்றிப் புறப்படும்போது பயணிகளுக்கு எரிச்சல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
அந்த ரயில் அடுத்த நாள் காலையில்தான் கொழும்பை சென்றடையும்.

இதனால் பொதுமக்களின் இந்த அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக 1956இல் ‘யாழ்தேவி’ என்ற பயணிகளுக்கான சிறப்பு கடுகதி ரயில் ஆரம்பிக்கப்பட்டது.
கனடாவில் இருந்து இற்குமதி செய்யப்பட்ட அதி சக்திகொண்ட என்ஜின்களால் உருவாக்கப்பட்டது இந்த ‘யாழ்தேவி’.

1956இல் இதன் முதல் பயணம் மிக உணர்வு பூர்வமானது. இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்று 8 வருடங்களேயான அந்தக் காலகட்டத்தில் இன முரண்பாடுகள் உருவாகத்தொடங்கிய காலமது.

இந்த காலத்தில் இலங்கையின் தலைநகரான கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ். நகரை மையப்படுத்தி செல்வதை இரு இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கான ஒரு அறை கூவலாக பாவிப்பதற்கு நேர்மையான அரசியல்வாதிகள் முயன்றார்கள்.

முக்கியமாக இதில் இடது சாரிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் ,அந்தக் காலத்திலேயே தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சம அந்தஸ்துக் கொடுத்து இலங்கையை பல இனங்களைக் கொண்ட சமத்துவ நாடாக்க வேண்டும் என்று கூறிவந்த, கேம்பிரிட்ஜ் பட்டதாரி பீற்றர் கெனமன் முக்கியமானவர். பீற்றர் கெனமன் இடதுசாரி அரசியல்வாதியாக இருந்ததால், அவரால், இலங்கையின் அரச நிர்வாகத்தில் பெருமளவான ஆளுமையைச் செலுத்தமுடியாமல் இருந்த போதிலும், இரு இனங்களிலும் இருந்த சமாதானத்தை விரும்பிய மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவராக இருந்தார்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமான யாழ்தேவி ஆரம்பிக்கப் பட்டபோது பீற்றர் கெனமன் மிக மகிழ்வுடன் சொன்ன வாக்கியம் “This is Life line of this country” இதிலிருந்து இந்த ரயில் சேவைக்கும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய இனக்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும், அவர் போன்றவர்கள், கொடுத்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

அந்தக் காலகட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வா கொழும்பு செல்வதற்கு யாழ்தேவியையே பயன்படுத்தினார் என்று கூறப்படுகின்றது.
யாழ்தேவி சமூகத்துக்கு செய்த சேவைகளில் முக்கியமானது கலப்புத்திருமணங்களை ஊக்குவித்ததுதான்.

கொழும்பில் மதியச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு யாழ்தேவியில் ஏறினால் இரவுச் சாப்பாட்டை யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் சாப்பிடலாம். இதனால் தென்னிலங்கையில் பரவலாக வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற தமிழ் இளைஞர் யுவதிகள் வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு யாழ் வந்துவிட்டு மீண்டும் ஞாயிறு புறப்பட்டு கொழும்புசென்று திங்கட்கிழமை வேலைக்குச் செல்வது வழமை.

இப்படியாக ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் இந்த ரயிலில் சந்திக்கும் இளைஞர்களும் யுவதிகளும் பயண இடைவெளியில் தமக்குள் தாமே கதைத்து அதன் மூலம் பெற்றுக்கொண்ட புரிந்துணர்வால் காதல் வசப்பட்டு, திருமணம் செய்த வரலாறுகள் பல உள்ளன.
யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தை அடைந்ததும் அங்கு முட்டி மோதும் வாகன ஓட்டுனர்கள், சிற்றுண்டி, கடலை வியாபாரிகள் என பலரின் குடும்பங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருந்தது இந்த யாழ்தேவி.

அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மற்றைய ரயில்களுடன் ஒப்பிடுகையில், யாழ்தேவி பல விதங்களில் வித்தியாசப்பட்டதை அதைப் பற்றிய தேடலின் போது காணக்கூடியதாக இருக்கிறது.

அது தனது பயணிகளுக்கு பரிமாறிய உணவு, பாரம்பரியமான யாழ்ப்பாண உணவுகளாகும். எக்காரணத்தைக் கொண்டும் அதன் தரத்திலோ சுவையிலோ மாற்றம் இருந்ததில்லை.
யாழ்தேவி செல்லும் பாதையின் அருகில் வசித்துவந்த மக்களின் கூற்றுப் படி, அந்த ரயில் கடந்து சென்று பல நிமிடங்கள் சென்றாலும் அதனுள் இருந்து வந்த உணவு வாசனை கம கமத்துக் கொண்டேயிருக்குமாம்.

கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் இந்த ரயில் 256 மைல்களைக் கடந்து (409 கி.மீ) தனது இலக்கை அடையும். இடையில் காணப்படும், ராகமை, பொல்கஹவெல, குருநாகல், மாஹோ, அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, ஆனையிறவு, யாழ்ப்பாணம், இறுதியாக கே.கே.எஸ்.என்றழைக்கப்படும் காங்கேசந்துறையில் தனது பயணத்தை நிறைவு செய்யும்.

ஒரு வரியில் யாழ்தேவி வரலாறு :-

1891 – யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவு
1892 – கண்டி – கொழும்பு பிரதான ரயில் மார்க்கம் உருவாக்கம்
1894 – குருநாகல் வரையான ரயில் மார்க்கம் திறப்பு
1897 – வடக்கு ரயில் மார்க்கத்தை அமைக்க அனுமதி
1899 – ரயில் மார்க்கத்தை அமைக்க இலங்கை சட்டவாக்க சபை அனுமதி
1900 – காங்கேசன்துறை – குருநாகல் ரயில் மார்க்கத்திற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
1902 – காங்சேன்துறை – சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் வரையான ரயில் மார்க்க நிர்மாணப் பணிகள் நிறைவு
1902 – காங்கேசன்துறை – பளை ரயில் மார்க்கம் திறந்து வைப்பு (24கி.மீ)
1904 – 1905 – அநுராதபுரம் வரையான பகுதி திறந்து வைப்பு, மதவாச்சி வரையான நிர்மாணப் பணிகள் நிறைவு
1905 – யாழ்ப்பாணம் – கொழும்பு முதலாவது ரயில் சேவை இடம்பெற்றது (பயண நேரம் 13.20 மணித்தியாலங்கள்)
1956 – யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பம்
1985 – முறிகண்டியில் கன்னி வெடி வெடித்ததில் 34 பேர் பலி ரயில் மார்க்கம் சேதம்
1986 – வவுனியா மற்றும் புளியங்குளத்தில் குண்டு வெடிப்புகள், ரயில் மார்க்கம் முற்றாக சேதம்
1987 – இந்திய அமைதி காக்கும் படையால் ரயில் மார்க்கம் புனரமைப்பு
1990 – விடுதலைப் புலிகள் குண்டுத் தாக்குதல், யாழ் ரயில் நிலையம் முற்றாக சேதம்