யாழில் சிங்கள மக்களுக்கும் வீடுகள்!

யாழ்.நாவற்குழியில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தில் சிங்கள மக்களும் உள்வாங்கப்படுவது குறித்து பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனால் இன்று குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் செந்தில்நந்தன், தென்மராட்சி பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

நாவற்குழி பகுதியில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் கடந்த 2010ஆம் ஆண்டில் தெற்கிலிருந்து சென்ற சுமார் 53 சிங்கள குடும்பங்கள் அத்துமீறி குடியிருந்தன. அத்தோடு, யாழ். மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 200 குடும்பங்கள் குறித்த பிரதேசத்தில் குடியேறின.

இந் நிலையில் வீடமைப்பு அதிகார சபையினால் அண்மையில் 200 தமிழ் குடும்பங்களுக்கும் 50 சிங்கள குடும்பங்களுக்கும் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டது.

குறித்த வீட்டுத்திட்டத்தில் சிங்கள மக்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டமை குறித்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. எனினும், எதிர்ப்புகளை கடந்து இன்று குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.