முதல் 5ஜி ஸ்மார்ட்போன்!!! ஒரே நொடியில் 1 ஜி.பி டவுன்லோடு…!

பெரும்பாலான நாடுகளில் 2ஜி சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. 2ஜி க்களின் காலம் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. அதை உணர்த்தும் வகையில் 4ஜி ஸ்மார்ட்போன்கள்தான் சந்தையை ஆக்ரமித்திருக்கின்றன.  இந்தியாவிலும் ரிலையன்ஸ் நிறுவனம் இனிமேல் 2ஜி சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டு 4ஜி சேவையை மட்டும் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் 3ஜி சேவையையே நிறுத்தப்படலாம் என ஏர்டெல் அறிவித்திருக்கிறது. தொழில்நுட்ப உலகில்   நெட்வர்க்கின் வேகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஸ்மார்ட்போன் புராசஸர்கள் தயாரிப்பதில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் குவால்காம். வெளிநாடுகளில் 4ஜி நெட்வொர்க் என்பது பல வருடங்களுக்கு முன்பே பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 5ஜி நெட்வொர்க்கை உருவாக்குவதற்காகப் பல நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன  5ஜி நெட்வர்க்கைவெற்றிகரமாகப் பரிசோதித்து விட்டோம் என்ற செய்தியும் அவ்வப்போது வெளியாகும். என்னதான் 5ஜியாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துவதற்கு ஒரு மோடமோ அல்லது ஸ்மார்ட்போனோ தேவைப்படுமே. அதை உருவாக்கியிருக்கிறது குவால்காம் நிறுவனம்.

செயல்திறன் அதிகம் என்பதால் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்ட்ராகன்   புராஸர்களே  பெரும்பாலும் பயன்படுத்தப்படும். ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் X50 என்ற 5ஜி மோடத்தை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தது. அதற்கு அடுத்தபடியாக அதைப் பயன்படுத்தி உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கியிருக்கிறது. ஸ்மார்ட்போன் உலகின் முன்னோடியாகக் கருதப்படும் ஆப்பிள் கூட தனது புராசஸர்களில் குவால்காமின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.