போலி வருமான வரிச் சோதனையில் ஏமாற்றப்பட்ட தீபா!

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, சென்னை தி.நகரிலுள்ள சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன், வருமானவரித்துறை அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், வீட்டைச் சோதனையிட வந்திருப்பதாகக் கூறினார்.

தகவல் அறிந்த செய்தியாளர்களும், பொலிசாரும் அங்கு வந்ததால் பதற்றமடைந்த அந்த நபர், திடீரென சுவரேறிக் குதித்து தப்பி ஓடினார்.

இந்நிலையில், போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த நபர், நேற்று இரவு சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

மேலும் தீபா கணவர் மாதவனின் யோசனைப்படியே தாம் போலி அதிகாரியாக நடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.gfh

மேலும் பொலிசார் நடத்திய விசாரணையில், தான் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரியில் ஹோட்டல் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது கடைக்கு தீபாவின் கணவர் மாதவன் அடிக்கடி வந்ததாகக் கூறிய பிரபாகரன், சினிமாவில் நடிக்கவைக்க வாய்ப்புத் தருவதாக மாதவன் கூறியதாகவும் தெரிவித்தார். வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்குமாறு கூறி, கூரியர் மூலம் அடையாள அட்டையை அனுப்பியதாகவும், அதனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருமாறு மாதவன் தன்னிடம் கூறியதாக பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தீபாவின் வழக்கறிஞர், ஊடகங்கள் மற்றும் பொலிசார் வந்ததால் தனக்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டதாகவும், அதனை மாதவனிடம் கூறியபோது, அருகில் இருந்த சந்துப் பகுதி வழியே தன்னை தப்பிச் செல்லுமாறு அவர் கூறியதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவதாகக் கூறி தீபாவிடம் பணம் பறிப்பதற்காக மாதவன் தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னரே தான் பொலிசில் சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தீபாவின் கணவர் மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் மாதவன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.