பைரவா படத்தின் திரை விமர்சனம்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்து உச்ச நிலையில் இருக்கும் நட்சத்திர நடிகர் விஜய், வசூல் வெற்றிபெறாத ‘அழகிய தமிழ் மகன்’ படத்தின் இயக்குனர் பரதனுடன் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘பைரவா’.

தன் திறமை மீது விஜய் வைத்த நம்பிக்கையையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பரதன் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறாரா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

பைரவா( விஜய்) சென்னையில் வங்கிக் கடன்களை வசூல் செய்துகொடுக்கும் பணியில் இருக்கிறான்.

தனது மேல் அதிகாரியின் (ஒய்.ஜி.மகேந்திரன்) மகளுடைய(பாப்ரி கோஷ்) திருமணத்துக்கு திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வரும் மலர்விழி (கீர்த்தி சுரேஷ்) என்ற பெண்ணைக் கண்டவுடன் காதலில் விழுகிறான்.

அவளிடம் தன் காதலைத் தெரிவிக்கச் செல்லும்போது அவள்,தன் சொந்த ஊரில், கல்வியாளர் என்ற போர்வையில் தவறான வழிகளின் மூலம் சம்பாதித்து பெரும் பணக்காரனான பிகே (ஜெகபதி பாபு) என்ற கொடியவனிடம் சிக்கிக்கொண்டிருப்பது தெரிகின்றது.

201609051300461539_vijay-bairavaa-final-leg-shooting-start-in-pollachi_secvpf

பிகேவுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மலர்விழி அவனது சுயநலத்தால் கொல்லப்பட்ட தன் தோழியின் மரணத்துக்கு நியாயம் கேட்கப் போராடுகிறாள் மலர்விழி.

தனது காதலுக்காகவும் நியாயத்துக்காகவும் பிகேவை எதிர்த்து அவனை சட்டத்தின் முன் நிற்க வைக்கும் பொறுப்பை ஏற்கும் பைரவா அதை எப்படி நிறைவேற்றுகிறான் என்பதே மீதிக் கதை.

படத்துக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருப்பதும் இத்தனை ரசிகர்கள் இந்தப் படத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பதும் முக்கியமாக நாயகன் விஜய்க்காகத்தான் என்பதை மறுக்க முடியாது.

அவர்  தன் பங்கை, தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

விக் வைத்திருப்பது உறுத்தலாகவே இல்லை. உடல் எடையை மேலும் குறைத்து இன்னும் இளமையாகத் தெரிகிறார்.

சண்டைக் காட்சிகளில் அவரது வேகமும் லாவகமும் பெரிதும் ரசிக்க வைக்கின்றன. நடனம் பற்றி சொல்லவே தேவையில்லை.

படம் நெடுக கிடைத்த இடத்திலெல்லாம் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள், உடல்மொழி, வித்தியாசமான வசன உச்சரிப்பு என்று பின்னுகிறார் மனிதர்.

bairawqa

அதோடு சக நடிகர்கள் தான் செய்வதைக் கலாய்ப்பதையும் அனுமதித்திருக்கிறார். அந்த நீதிமன்ற காட்சியில் உணர்ச்சி பொங்க நீண்ட வசனம்பேசி எமோஷனல் நடிப்பிலும் சிறப்பாக தாக்கம் செலுத்துகிறார்.

மொத்தத்தில் இந்தப் படத்தை தன் அனுபவத்தாலும் திறமைகளாலும் தோளில் சுமந்து காப்பாற்ற முயன்றிருக்கிறார்.

ஆனால் அதற்குக் கதையும் திரைக்கதையும் கொஞ்சமாவது துணை புரிய வேண்டாமா?‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் வருங்காலத்தை முன்கூட்டிய தெரிந்துகொள்ளும் நாயகன் என்ற புதுமையான விஷயத்தை வைத்திருந்த பரதன் இந்தப் படத்தில்  தனியார் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் ஊழல்களைக் கையிலெடுத்திருக்கிறார்.

பல்லாயிரம் இளைஞர்களுக்கு கல்வி கொடுக்கும் நிறுவனத்தைத் தொடங்குபவருக்கு எந்த நல்ல தகுதியும் இருக்கத் தேவையில்லை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களைத் தொடங்கலாம் என்ற அவல நிலை நிலவுவதை சுட்டிக்காட்ட முயற்சித்திருக்கிறார்.

ஆனால் இவற்றை எவ்வளவோ சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லி இருக்க முடியும். அப்படிச் செய்வதற்கான வாய்ப்புகளைக் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.

முதல் பாதியில் அந்த ஃப்ளேஷ்பேக்கில் சில அழுத்தமான காட்சிகள் இருந்தாலும் மிக நீளமாக பொறுமையை சோதிக்கிறது.

bai

இந்த நீண்ட ஃப்ளேஷ்பேக்கினால் படத்தில் கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கு விஜய்க்கு வேலையே இல்லை என்பதால் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைகின்றனர்.

சரி காட்சிகளிலாவது ஏதாவது புதுமை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

இரண்டாம் பாதியில் அவ்வளவு படை பலமும் செல்வாக்கும் வாய்ந்த வில்லனை நாயகன் எதிர்கொண்டு வீழ்த்தும் காட்சிகளில் புதுமையாக எதையாவது யோசிக்கவோ.

சுவாரஸ்யமாகவும் கொஞ்சமாவது நம்பும்படியும் காட்சிகளை அமைக்கவோ துளியும் மெனக்கெடவில்லை.

ஒட்டுமொத்த படத்தில், முதல் சண்டைக் காட்சியும் அதற்கு முன் நடப்பவையும், இண்டெர்வெல் சண்டைக் காட்சி, இரண்டாம் பாதியில் விஜய்யும் டேனியல் பாலாஜியும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் காட்சி, நீதிமன்றக் காட்சி…இவ்வாறு மிகச் சில காட்சிகள் மட்டுமே ரசிக்கும் படி அமைந்திருக்கின்றன.

பெரும்பாலும் அரதப் பழசான காட்சி அமைப்புகள்; லாஜிக் என்பதை சுத்தமாக மறந்துவிடத் தயாராக இருந்தால்கூட கிளைமேக்ஸ் காட்சியில் நடப்பவற்றை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியவே இல்லை.

சரி காட்சிகளில்தான் கவனம் செலுத்தவில்லை மேக்கிங்கிலுமா இவ்வளவு அசிரத்தையாக இருப்பது?

விஜய் போன்ற ஒரு நட்சத்திர நடிகர் நடித்த படத்தில் டூவீலர் ஓட்டும் காட்சிகளில் க்ரீண் மேட் பயன்படுத்தப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. செட்கள் மிக மிக செயற்கையாக உள்ளன.

விஜய் படத்தில் இந்த அளவு ரசிக்கவைக்கத் தவறிய பாடல்கள் இருந்ததே இல்லை. ‘வரலாம் வா’ தீம் இசை மட்டுமே ரசிக்க வைக்கிறது.

விஜய் பாடியிருக்கும் ‘பாப்பா பாப்பா’ பாடல் ஒரளவு சுமாராக உள்ளது. பின்னணி இசையும் காட்சிகள எந்த விதத்திலும் தூக்கி நிறுத்தவில்லை.

ஒரு பரபரப்பான சண்டைக் காட்சிக்கு நாடகத்தனமான மெதுவாக இசை வருகிறது. இது வித்தியாசமாக இருந்தாலும் ரசிக்கும்படி அமையவில்லை.

சுகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென்று இருக்கின்றன.

bai

ஒரே விஷயத்தைப் பல முறை சொல்வது போல் தேவையற்ற ஷாட்கள் படம் எங்கும். அதே போல் சீரியல்களில் வருவது போல் ஒரு விஷயத்துக்கு நான்கைந்து பேர் கொடுக்கும் எக்ஸ்பிரஷனைப் பதிவு செய்யும் ஷாட்கள் காட்டப்படுகின்றன.

இத்தனை குறைகள் எடிட்டிங்கில்.விஜய்க்குப் பிறகு படத்தில் பாராட்டப்பட வேண்டியவர் சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு.

சண்டைக் காட்சிகள் பரபபரப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மசாலாத்தனம் நிரம்பி இருந்தாலும் விஜய் போன்ற ஒரு மாஸ் நடிகர் இருப்பதால் அது ஒரு குறையாகத் தெரியவில்லை.,

ஃப்ளேஷ்பேக் காட்சிகளில் சில இடங்களிலும் நீதிமன்றக்  காட்சியிலும் பரதனின் வசனங்கள் பளிச்சிடுகின்றன. குறிப்பாக நீதிமன்றக் காட்சியில் வசனங்கள் அழுத்தமாக உள்ளன.

கீர்த்தி சுரேஷுக்கு கதைப்படி மிக முக்கியமான வேடம். ஆனாலும் வழக்கமான நாயகி வேடம்தான். நடிப்பதற்கு பெரிய சவால் ஒன்றும் இல்லை. அழகாக இருக்கிறார்.

கொடுத்த வேடத்தைக் குறையின்றிச் செய்திருக்கிறார். ஜெகபதி பாபுவும், டேனியல் பாலாஜியும் வில்லன்களாக தங்கள் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

துணை நடிகர்களில் நாயகியின் கல்லூரித் தோழியாக வரும் அபர்ணா வினோத், அக்காவாக வரும் சிஜா ரோஸ் ஆகியோர் மனதில் தங்கும் நடிப்பை தந்திருக்கிறார்கள்.

ஒய்ஜி.மகேந்திரன், ஆடுகளம் நரேன் ஆகியோர் சிறிய வேடம் என்றாலும் தங்கள் அனுபவ முத்திரையை பதிக்கிறார்கள்.

bairawa

சதீஷின் காமடிக்கு முதல் பாதியில்சில இடங்களில் வெடித்து சிரிக்க முடிகிறது. தம்பி ராமையா வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய பலம் விஜய்யின் திரை ஆளுமையும்  ஒரு நாயகனாக அனைத்து அம்சங்களிலும் அவரது பங்களிப்பும்தான், கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளில் தனி முத்திரை பதித்தவர்  இன்னும் நல்ல திரைக்கதையும் வலுவான பாத்திரமும் கிடைத்திருந்தால் புகுந்து விளையாடி மறக்க முடியாத பொங்கல் விருந்து படைத்திருப்பார் என்று வருந்தாமல் இருக்க முடியவில்லை.

மொத்தத்தில் ‘பைரவா’ படத்தைப் பார்க்க வேண்டும் என்றால் விஜய்க்காகவும் ஒரு சில நல்ல காட்சிகளுக்காவும் மட்டும்தான் பார்க்க வேண்டும்.