பேஸ்புக் வதந்தியால் பங்களாதேஷ் கிராமமொன்றின் மீது தீவைப்பு..

பேஸ்புக் சமூகதளத்தில் இறைத்தூதர் முஹமதுவை இழிவுபடுத்தியதாக வதந்தி பரவியதை அடுத்து பங்களாதேஷில் முஸ்லிம் கும்பல் ஒன்று இந்து கிராமம் ஒன்றை தீக்கிரையாக்கியுள்ளது.

தகுர்பாரி என்ற கிராமத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை புகுந்திருக்கும் சுமார் 20,000 பேர் இந்து வீடுகளை தாக்கியுள்ளனர். இந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஐவர் மோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இறைத்தூதரை அவதூறு செய்யும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்டதாக கலகத்தில் ஈடுபட்ட அந்த கும்பலை பொலிஸார் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர். பொலிஸார் கிராமத்தை அடையும்போது குறைந்தது 30 வீடுகள் தீமூட்டி அழிக்கப்பட்டிருப்பதோடு ஏனைய வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அண்டைய கிராமத்தைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸார் இதுவரை 53 பேரை கைது செய்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக இடம்பெற்ற கலவரத்தில் பங்களாதேஷில் 15 இந்து கோவில்கள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.