இனவெறி தாக்குதலால் உயிருக்கு போராடும் இளைஞர்!

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் பெங்களூரில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கோமா நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இது ஒரு இனவெறி தாக்குதல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூர் கோரமங்களா பகுதியிலுள்ள ஒரு பப் பாரில் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்து வருபவர் குவாதுன் கன்கம்.

22 வயதாகும் வாலிபரான இவர் அதே பகுதியில் நண்பருடன் அறையொன்றில் தங்கியிருந்தார்.

நேற்று நள்ளிரவில் அவர் வேலை பார்த்த பப்பிலிருந்து 1 கி.மீ தூரத்தில் தலையில் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சாலையோரம் அவர் பாதி மயக்கமான நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு போலீசார், நிமான்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்நிலையில், அவர் கோமா நிலைக்கு போய்விட்டார்.

இதுகுறித்து கர்நாடகாவிலுள்ள, அருணாச்சல பிரதேச மாணவர் சங்கம் தலைவர் டோகோ ஜான் கூறுகையில்,

“இது ஒரு இனவெறி தாக்குதல் என சந்தேகிக்கிறோம். எங்கள் சங்கம் சார்பில் பெங்களூரில் போராட்டம் நடத்த உள்ளோம்.

அருணாச்சல பிரதேச மாநில எம்.எல்.ஏக்கள் குழுவை அழைத்து வந்து பெங்களூர் கமிஷனரிடம் எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வலியுறுத்த உள்ளோம்.

எங்களது தோற்றம் வேறுபாடுடன் இருப்பதாலேயே நாங்கள் இந்தியர்கள் அல்ல, சீனர்கள் என கருதிவிட முடியாது” என்றார்.