பாலியல் லஞ்சம் கோரினால் அறிவிக்கவும்!

பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் லஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் அறிவிக்குமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் அறிவிக்குமாறு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி அறிவித்துள்ளார்.

குறிப்பாக இக்காலப் பகுதியில் 2017 ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை தரம் 01 இற்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது, எந்தவொரு அதிபராவது இவ்வாறு லஞ்சம் கோரினால், உடன் அறியத்தருமாறும் பிரியந்த சந்திரசிறி கேட்டுள்ளார்.

சில பெற்றோர்கள் அதிபர்கள் கேட்கும் லஞ்சம் தொடர்பில் தகவல்களை மறைத்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடங்களில் தரம் 01 இற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்காக லஞ்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சுமார் 50 அதிபர்கள் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் கூறியுள்ளார்.