‘பாகுபலி’ பட பாணியில் யானையின் மீது ஏற முயன்ற தொழிலாளி!!! – ஏற்பட்ட பரிதாபம்!!!

‘பாகுபலி’ பட பாணியில் யானையின் மீது ஏற முயன்ற தொழிலாளியை தூக்கி வீசியதால் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் உள்ள தோட்டத்தில் வெட்டப்பட்ட மரங்களை தூக்கி வருவதற்காக வளர்ப்பு யானை ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த யானை, அங்குள்ள மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.

 

அப்போது தொடுபுழாவை சேர்ந்த தொழிலாளி சாஜி (வயது 40) என்பவர் அங்கு வந்தார். யானை மரத்தில் கட்டப்பட்டிருந்ததை கண்ட அவர், ‘பாகுபலி’ படத்தில் நடிகர் பிரபாஸ் யானையின் தந்தங்களை பிடித்து ஏறுவது போன்று அவரும் ஏற நினைத்தார். இதற்காக யானைக்கு வாழைப்பழத்தை கொடுத்தார். அதை யானையும் வாங்கியது. பின்னர் நைசாக யானையின் அருகில் சென்ற சாஜி, தந்தங்களை பிடித்து ஏற முயன்றார்.

 

அந்தவேளையில், யானை மிரண்டு அவரை தூக்கி வீசியது. இதில் அவர் நிலைகுலைந்து போனார். மேலும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.