“பராமரிக்க ஆட்கள் இல்லை!” – பரிதாபத்தில் முடிந்த முதியவர்கள் வாழ்க்கை

யதான தம்பதியைப் பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல் போனதால், மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள சீனிவாசபுரம் பகுதியில் வசித்துவந்தனர் கணபதி என்ற 90 வயது முதியவரும், 86 வயதான அவரது மனைவி வள்ளியம்மாளும்.

 

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த இவர்கள் பல வருடங்களுக்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறி, திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தைச் சேர்ந்த சீனிவாசபுரம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். மூன்று ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் என மொத்தம் ஐந்து பிள்ளைகளைப் பெற்ற இத்தம்பதியர், சீனிவாசபுரத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்திவந்தனர்.

 

வருடக்கணக்கில் ஓய்வின்றி உழைத்த கணபதியும் – வள்ளியம்மாளும் தாங்கள் பெற்ற ஐந்து பிள்ளைகளையும் வளர்த்து, ஆளாக்கி, அனைவருக்குமே திருமணத்தையும் செய்துவைத்தது எனப் பெற்றோருக்கான கடமையில் சிறிதும் குறைவைக்கவில்லை. ஆனால், கணபதிக்கும் – வள்ளியம்மாளுக்கும் மகன்கள் மூன்று பேர் இருந்தும், அந்த மூவருமே திருமணம் முடிந்து தங்களின் மனைவிகளுடன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டதுதான் வேதனை.

 

மூன்று மகன்களில், இரண்டு பேர் வேறுவேறு இடங்களில் அவரவர் மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றுவிட, அதில் இரண்டாவது மகன் குமாரசாமி மட்டும் பெற்றோரின் வீட்டருகிலேயே மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து, அவ்வப்போது பெற்றோரின் வீட்டுக்கு வந்து இருவரையும் கவனித்துக்கொண்டு இருந்திருக்கிறார். ஐந்து பிள்ளைகள் வளர்ந்த வீட்டில், யாருமே இல்லாத நிலைமை உருவாகிவிட, உழைத்துக் களைத்த தம்பதியர், தங்களின் தள்ளாத வயதிலும் தனியாக அந்த வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில்தான் 86 வயதைக் கடந்த வள்ளியம்மாளுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டு, நடக்க முடியாத சூழ்நிலையில் வீட்டில் முடங்கிப்போய் இருந்திருக்கிறார். 90 வயதாகிவிட்ட அவருடைய கணவர் கணபதிக்கோ, தன் மனைவியைத் தன்னால் சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வேறு மனதைப் பல நாள்களாக உலுக்கி எடுத்திருக்கிறது. நடப்பதற்கே இருவரும் சிரமப்பட்ட நிலைமையில், உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு தங்களின் கடைசிக் காலத்தின் ஒவ்வொரு நாள்களையும் ரணவேதனையுடன் கடத்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள் முதியவர்கள்.

 

நாள்கள் இப்படியாகக் கடந்துகொண்டு இருக்க, தன் மனைவிக்குச் சரியான மருத்துவத்தை அளிக்க முடியாமல் போய்விட்ட மனவேதனையும் முதியவர் கணபதிக்கு அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கிறது.

வழக்கம்போல நேற்று காலை வானமும் விடிந்திருக்க, வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த முதியவர்கள் என்னவெல்லாம் நினைத்துப் பார்த்தார்களோ தெரியவில்லை. இருவரும் ஒன்றாக விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  குமாரசாமியின் மனைவி பாரதி நேற்று காலை காபி போட்டுக் கொடுப்பதற்காக முதியவரின் வீட்டுக்குள் நுழைய, இருவரும் உயிரற்றுக் கிடந்ததைப் பார்த்துவிட்டுப் பதறிப்போயிருக்கிறார். உடனே தன் கணவரையும், அக்கம்பக்கத்தினரையும் அழைத்திருக்கிறார் பாரதி.

 

பின்னர் தகவல் அறிந்த காவல் துறையினர் இறந்துபோன முதியவர்களின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து அவிநாசி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருக்கிறார்கள்.