நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் படுகாயம்!

December 26, 2016 இந்திய செய்திகள் Leave a comment 37 Views

சபரிமலை ஐயப்பன் கோவிலில், தடுப்பு கயிறு அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், மண்டலபூஜையையொட்டி கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது.

நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

திங்கள்கிழமையான இன்று நடைபெறும் மண்டல பூஜையின்போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி கடந்த 22-ம் திகதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. நேற்று மதியம் தங்க அங்கி பம்பை வந்து சேர்ந்தது.

பம்பை கணபதி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின் தலைச்சுமையாக தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி மேள, தாளம் முழங்க சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்த தங்க அங்கிக்கு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மண்டலபூஜையையொட்டி கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதற்காக தடுப்பு கயிறு கட்டப்பட்டுள்ளது.

பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால், சன்னிதானத்துக்கும் மாளிகைபுரத்துக்கும் இடையே கட்டப்பட்டு இருந்த தடுப்பு கயிறு நேற்று திடீரென்று அறுந்தது.

இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். பயங்கர நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 31பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

2 பேருக்கு தலையிலும், விலா எலும்பு பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், அவர்கள் இருவர் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது. இன்று காலை 9 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பின்னர், 11.55 மணி முதல் மதியம் 1 மணி வரை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மண்டல பூஜை நடைபெறுகிறது.

மண்டல பூஜையை முன்னிட்டு பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.