நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகிய நண்பர்களை பைக்கில் கொண்டு சென்ற தோழர்கள்..!

தமிழ்நாட்டின் கொளத்தூர் தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் பக்வன்சிங் மகன் யஷ்வந்த் (19). இவர்  என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் தனது நண்பர்கள் மூலக்கடையைச் சேர்ந்த யாசின், காமேஷ், ராஜாராவ், பிரபாகரன் ஆகிய 4 பேருடன் ஆந்திர மாநிலம் தடா அருகே சக்தி கூட்டிமடுகு என்ற இடத்தில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு 2 மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றனர்.

அங்கு கல்லூரி மாணவர் யஷ்வந்த் நீர்வீழ்ச்சியில் குதித்தபோது சேற்றில் சிக்கி கொண்டார். அவரை காப்பாற்ற யாசின் முயன்றார். ஆனால் அவரும் சிக்கி கொண்டார்.

இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதைபார்த்த நண்பர்கள் 3 பேரும் அலறினார்கள். உடனே கிராம மக்கள் அங்கு வந்து தண்ணீரில் மூழ்கிய 2 பேரின் உடல்களை மீட்டு வெளியே எடுத்து வந்தனர்.

ஆனால் ஆந்திர  பொலிசிற்கு தகவல் தெரிவிக்காமல் 2 பேரின் உடல்களை மோட்டார்சைக்கிளில் வைத்து சென்னைக்கு கொண்டு செல்ல நண்பர்கள் 3 பேரும் முடிவு செய்தனர்.

அதன்படி ஒரு மோட்டார்சைக்கிளில் யஷ்வந்த் உடலை நடுவில் வைத்தபடி 2 பேர் கொண்டு சென்றனர். மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் யாசின் உடலை கயிற்றில் கட்டியபடி கொண்டு சென்றனர்.

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் சென்றபோது   பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் இருந்த யஷ்வந்த், யாசின் உடல்கள் வீதியில் விழுந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொலிசார் 3 பேரிடம் விசாரித்தனர். 2 பேரும் நீர் வீழ்ச்சியில் மூழ்கி இறந்து விட்டனர். உடல்களை மோட்டார்சைக்கிளில் வைத்து சென்னைக்கு கொண்டு சென்றோம் என்றனர்.

இதையடுத்து 2 வாலிபர்களின் உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசிற்கு தகவல் தெரிவிக்காமல் உடலை ஏன் சென்னைக்கு கொண்டு சென்றனர் என்பது குறித்து 3 பேரிடம் விசாரித்து வருகிறார்கள்.

வாலிபர்கள் பலியானது குறித்து அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை புறப்பட்ட 5 பேரும் டோல் கேட்டில் செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்ததாக அவர்களது நண்பர்கள் தெரிவித்தனர்.