நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவிய பாக்கிஸ்தான் அணி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இரண்டு போட்டிகளிலும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டுனிடினில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் அந்த அணி, 257 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. அந்த அணியின் குப்தில் 45 ரன்னும் கேப்டன் வில்லியம்சன் 73 ரன்னும் ராஸ் டெய்லர் 52 ரன்னும் குவித்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ரும்மான் ரேயிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சதாப் கான் 2 விக்கெட்டையும் அஷ்ரப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான அசார் அலி ரன் எதுவும் எடுக்காமலும் பஹார் ஜமான் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களின் விக்கெட்டை போல்ட் கபளீகரம் செய்தார். அடுத்து வந்த பாபர் அசாம், 8 ரன்னில் ரன் அவுட் ஆனார். அனுபவ வீரர்கள் முகமது ஹபீஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சோயிப் மாலிக் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றினர். சதாப் கானும் டக் அவுட்டாக, வெறும் 16 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது.

இந்நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பாக்கிஸ்தான்அணி, 27.2 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி, 183 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நியூசிலாந்து தரப்பில் போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பாகிஸ்தானின் மிகக் குறைந்த ஸ்கோர் 43. 1993-ம் ஆண்டு கேப்டவுனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த ரன்னை எடுத்தது.