துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடும் 8 வயது சிறுவன்!!

சென்னையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஆகாஷ்குழந்தைகள் உரிமைக்காக ஐந்து வயதிலிருந்து குரல்கொடுத்துவருகிறார்.

சாலைப்பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, கருவேல மர ஒழிப்பு, மதுவுக்கு எதிரான போராட்டம் என நீளும் பட்டியலில்… இந்த ஆண்டு முதல், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தையும் ஆகாஷ் தொடங்கியுள்ளார்.

 

சாலையில் நின்று விழிப்புணர்வூட்டிய சிறுவன்

தற்போது எட்டு வயதான ஆகாஷ் , மதுவுக்கு எதிரான போராட்டம், கருவேல மர ஒழிப்பு, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை என பல சமூக அவலங்களை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.

 

இந்தியாவில் நவம்பர் 14 குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நேரத்தில், தன்னைப் போன்ற குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிறுவன் ஆகாஷிடம் அவனது வெற்றிக் கதைகளை கேட்டோம் .

”நானும் அப்பாவும் வீட்டுக்கு வரும் வழியில் சாலை விபத்து நடந்து ஒருவர் இறந்து கிடந்தார். ஹெல்மெட் போட்டிருந்தா அவரு தப்பிச்சிருக்கலாம்னு அப்பா சொன்னாரு. இறந்து போனவரோட குழந்தைகள் ரொம்ப கஷ்டப்படுவாங்கனு தோனுச்சு.எல்லோரும் ஹெல்மெட் போடனும்னு ரோட்டில நின்னு சொன்னேன். நிறைய அண்ணன்கள் அடுத்தநாள் ஹெல்மெட் போட்டுட்டுவந்து எனக்கு நன்றி சொன்னாங்க,” என தனது முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து ஆர்வமாகப் பேசினார் ஆகாஷ்.

குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் எனில் அவர்களின் குடும்பம், பள்ளிக்கூடம், சமூகம் என எல்லா இடங்களும் பாதுகாப்பு அளிப்பவையாக இருக்கவேண்டும் என்றும் அதை உறுதிப்படுத்தப் பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை செய்யவேண்டும் என்கிறார் ஆகாஷ்.