தற்போதைய அரசு மீது குற்றம் சுமத்தும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி!

தற்போதைய அரசாங்கத்திடமிருந்து நாட்டை மீட்க வேண்டு எனவும் இல்லையேல் எதிர்காலத்தில் நாட்டின் வளங்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுவிடும் எனவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அம்பாந்தோட்டை விமான நிலையங்களை சீனாவுக்கும் வடக்கில் காங்கேசன் துறை துறைமுகம் பலாலி விமான நிலையம் , சாம்பூர் மின் நிலையம் ஆகியவற்றை இந்தியாவுக்கும் திருகோணமலை எரிபொருள் களஞ்சியத்தை அமெரிக்காவுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இதனை பார்த்துக் கொண்டுதான் வருகின்றோம். ஒரு மிருகத்திற்கு சமமானோரே கடற்படைத் தளபதியாக இருக்கின்றார்.

இப்படியே தொடருமானால் , இதே ஆட்சி தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமானால் இலங்கையின் அனைத்து சொத்துகளும் வெளிநாடுகளுக்கு சென்று விடும்.

மேலும், இந்த ஆட்சி எதிர்வரும் 2020-ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டு செல்லுமாயின் பொலிஸ் சேவை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள் தவிர ஏனைய அனைத்தும் தனியார் மயப்படுத்தப்பட்டு விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.