தற்கொலை வலைதளங்கள்.!

வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது தற்கொலை எண்ணங்களை பகிர பயன்படுத்தும் வலைதளங்களை தடுக்க விரும்புவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இத்தகைய வலைதளங்களை பயன்படுத்தி, தொடர் கொலைகள் நிகழ்ந்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபரில், டோக்கியோவின் புறநகர் பகுதிகளில் உள்ள “திகில் வீடு” என்று கூறப்படும் ஒரு வீட்டில் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் கருவி பெட்டிகளில் ஒன்பது சிதைந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஒன்பது தலைகளுடன் அதிக எண்ணிக்கையில் கை மற்றும் கால் எலும்புகளை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஜப்பானையே உலுக்கிய இந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தம் ஒன்பது கொலைகளை தாம் செய்துள்ளதாக 27 வயதான டகஹிரொ ஷிரைஷி ஒப்புக் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார்?

சமூக வலைதளங்களில் தற்கொலை எண்ணங்களை சிலர் வெளிப்படுத்தியதன் மூலம், ஷிரைஷிக்கு அவர்களை தெரிய வந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டிற்கு வரவழைத்து, அவர்கள் உயிரை எடுக்க தாம் உதவுவதாக ஷிரைஷி கூறியுள்ளார்.

15 வயது மாணவி உட்பட மூன்று உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், இருபதுகளில் உள்ள நான்கு பெண்கள் மற்றும் இருபது வயதுடைய ஆண் ஆகியோர் ஷிரைஷியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

இதில் அந்த இருபது வயதுடைய ஆண், தனது காதலி குறித்த தகவல்களை ஷிரைஷியிடம் கூறிய பிறகு கொல்லப்பட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஓர் இளம்பெண் காணாமல் போனதை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் இவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அந்தப் பெண், தன் உயிரை மாய்த்துக் கொள்ள சமூக ஊடகங்களில் யாரையோ பார்க்க சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை வலைதளங்கள் என்றால் என்ன?

தங்களை தாங்களே கொல்ல விரும்புகிறவர்களுக்கான தகவல்களை இந்த தற்கொலை வலைதளங்கள் மற்றும் சமூக ஊடக குழுக்கள் வழங்குகின்றன.

அவர்கள் உயிரை அவர்களே மாய்த்துக் கொள்ள இது போன்ற வலைதளங்கள் ஊக்குவிக்கின்றன.

இணையதள பயன்பாடு இளைய தலைமுறை ஜப்பானிய மக்களுக்கு சில விஷயங்களை மோசமாக்கக்கூடும் என டோக்கியோவை சார்ந்த தற்கொலை தடுப்பு மையத்தின் தலைவர் டோரூ ஈகவா, ஜப்பான் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனியாக தற்கொலை செய்ய பயந்து சிலர் பின்வாங்கினர். ஆனால் இந்த சூழலை தற்கொலை தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மாற்றி அமைத்துவிட்டதாக அவர் கூறினார்.

இதற்கான ஆன்லைன் நண்பர்கள் கிடைத்த பிறகு பயம் என்ற தடையை எளிமையாக அவர்கள் கடந்து விடுகின்றனர் எனவும் டோரூ தெரிவித்தார்.

எப்படி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற தகவல்களை உடைய வலைதளங்களை பார்வையிடும் 20 சதவீத இளைஞர்கள், ஏற்கனவே தற்கொலை முயற்சி செய்தவர்கள் என்றும் அதனை ஒப்பிடும் போது வெறும் மூன்று சதவீத இளைஞர்கள் மட்டுமே பொதுவாக இந்த தளத்தை பார்வையிட வருவதாகவும் 2015 ஆம் ஆண்டில் பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் படி, 2015 ஆம் ஆண்டில் 100,000 மக்களுக்கு 19.7 சதவீத மக்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளனர்.

இந்த புள்ளி விவரங்கள், ஜப்பானை அதிக தற்கொலை விகிதம் உள்ள நாடாக ஆக்காது.

தென்கொரியாவில் 2015-ம் ஆண்டில் 100,000 மக்களுக்கு 28.3 சதவீத மக்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளனர்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில், இந்த புள்ளி விவரங்கள் 100,000 மக்களுக்கு முறையே 8.5 மற்றும் 14.3 சதவீதமாக உள்ளது.