தமிழ்நாட்டில் மேலும் 4 ‘ஸ்மார்ட்’ நகரங்கள் !

தமிழ்நாட்டில் மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம் நகரங்களை ‘ஸ்மார்ட்’ நகரங்களாக மேம்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

100 ‘ஸ்மார்ட்’ நகரங்கள்

நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து அவற்றை சர்வதேச தரத்துக்கு உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு, அதற்காக ‘ஸ்மார்ட்’ நகர திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 20 நகரங்களும், இரண்டாவது கட்டமாக 13 நகரங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன. முதல் பட்டியலில் சென்னை, கோவை நகரங்கள் இடம் பெற்றிருந்தன.

இரண்டாவது பட்டியலில் 13 நகரங்களில் தமிழகம் இடம் பெறவில்லை.

4 தமிழக நகரங்கள்

இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் 27 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதுபற்றி மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறியதாவது:–

மூன்றாவது கட்டத்தில், ‘ஸ்மார்ட்’ நகரங்களாக தேர்வு பெறுவதற்கு 63 நகரங்கள் போட்டியில் இருந்தன. அவற்றில் 12 மாநிலங்களை சேர்ந்த 27 நகரங்கள் தேர்வு பெற்று உள்ளன. தமிழ்நாட்டின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் நகரங்கள் தேர்வாகி உள்ளன.

மராட்டியம், கர்நாடகம்

27 நகரங்கள் பட்டியலில் மராட்டியம் 5 நகரங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. அங்குள்ள அவுரங்காபாத், நாசிக், தானே, நாக்பூர், கல்யாண்–டோம்பிவிலி ஆகிய 5 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, டுமாகுரு (தும்கூர்), ஷிவமோகா, ஹூப்ளி தர்வாத் ஆகிய 4 நகரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த 27 நகரங்களுக்கான முதலீடு ரூ.66 ஆயிரத்து 883 கோடி ஆகும்.

அடுத்த கட்டம்

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 27 நகரங்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 60 நகரங்கள், ‘ஸ்மார்ட்’ நகர பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 100 நகரங்களில் 60 நகரங்களில் திட்ட அமலாக்கல் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 20 நகரங்களில் 82 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 113 திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட்டு விடும். அடுத்த ஆண்டு ‘ஸ்மார்ட்’ நகரங்கள் உருவெடுப்பதை காணலாம்.

மீதி 40 நகரங்களை தேர்வு செய்வதற்கான பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.