டி.டி.வி. தினகரன் கோரிக்கைக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு!!!

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை தங்கள் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்ற டி.டி.வி.தினகரன் தரப்பு கோரிக்கைக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 1996-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 331 அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாக கூறி அவர் மீது அமலாக்கத்துறையினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

எழும்பூர் கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் 12 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். தொடர்ந்து அமலாக்கத்துறையின் சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் அடிப்படையில் ஏற்கனவே டி.டி.வி.தினகரனிடம் நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் அளித்தார்.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல், தங்கள் தரப்பு சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று கோரி சாட்சிகள் பெயர் பட்டியலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த பட்டியலில் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி உள்பட வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேரின் பெயரும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வங்கியில் முறைகேடாக பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருப்பதால் அதுதொடர்பான ஆவணங்களை லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மூலமே அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்று இருப்பார்கள் என்பதால் தூதரக அதிகாரியையும் விசாரிக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் இதுபோன்று வெளிநாட்டில் இருப்பவர்களையும், அமலாக்கத்துறை அதிகாரிகளையும் சாட்சிகளாக சேர்த்து இருக்கிறார்கள் என்றும், எனவே, இதை அனுமதிக்கக்கூடாது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல் செந்திவேலன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை இங்கு வரவழைத்து விசாரிக்க வேண்டுமென்றால் அவர்களது போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும் என்றும், அதற்கு தயாராக இருக்கிறீர்களா என்றும் டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினர்.

இதன்பின்பு, லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி உள்பட வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேரையும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலரையும் டி.டி.வி.தினகரன் தரப்பு சாட்சியாக விசாரிக்க அனுமதிக்கலாமா? கூடாதா? என்பது குறித்த விசாரணைக்காக வழக்கை நீதிபதி நாளை மறுநாள்(16-ந் தேதி) தள்ளிவைத்தார்.