டிரம்ப்புடன் கைகோக்கும் தெரேசா மே 

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பிரிட்டனுக்கு அதிகாரபூர்வ வருகையளிக்கும்போது அவரை வரவேற்கப் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே முடிவெடுத்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பிரதமரின் சொந்தக் கட்சியும் அந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. அண்மையில் அமெரிக்காவில் முஸ்லிம் பெருபான்மை கொண்ட நாடுகளுக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டது. அந்த உத்தரவின் மூலம், அமெரிக்காவின் அகதிகள் திட்டம் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டது.

தடையால் பாதிக்கப்பட்ட ஏழு நாடுகளுடன் இரட்டை குடியுரிமைக் கொண்ட பிரிட்டிஷ் குடிமக்கள் பாதிப்படையலாம் என்ற அக்கறைகள் நிலவின. ஆயினும், அவர்களுக்குப் பாதிப்பில்லை என்று அமெரிக்கா உத்தரவாதம் அளித்ததாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.

பிரிட்டிஷ் கீழவையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன், திரு டிரம்ப்பின் தடை பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியிருக்கிறது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் கேள்வி பதில் அங்கத்தில் தடை குறித்த கண்டனங்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரு டிரம்ப்பின் குடிநுழைவுக் கொள்கையால் பிரிவுகள் ஏற்படும் என்று திரு ஜான்சன் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறினார்.
ஆனாலும் மற்ற ஜரோப்பிய தலைவர்களைப் போல் திருமதி திரேசா மே ஏன் வன்மையாகக் குறைகூறவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ஜான்சனிடம் கேள்வி கேட்பர் என்று நம்பப்படுகிறது.