ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கும் ட்ரம்ப் – துருக்கி, சீனா கண்டனம்!!!

 

ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இன்று அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இம் முடிவுக்கு துருக்கி, சீனா, பிரான்ஸ், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.

 

இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் இருந்து அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. மேலும், அருகாமையில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் சில புதிய குடியேற்றங்களை இஸ்ரேல் அமைத்துள்ளது. எனினும், ஜெருசலேம் நகரம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நகராகவே கருதப்பட்டு வருகிறது.

 

கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

 

இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

 

 

, ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இன்று அறிவிக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு துருக்கி, சீனா, பிரான்ஸ், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

அமெரிக்காவின் இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீயை மூட்டிவிட்டு மிகப்பெரிய பேரழிவாக முடியும் என்று அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான துருக்கி எச்சரித்துள்ளது.