ஜனாதிபதியை நள்ளிரவில் தொல்லைப்படுத்திய அரசியல் முக்கியஸ்தர்!

எல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன கலந்துக் கொண்டார்.

 

இந்நிலையில் அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “நான் இதுவரை கூறாத ஒரு விடயத்தை கூற போகின்றேன். ஊடகங்களுக்கும் என்னை பற்றிய புதிய விடயங்கள் அவசியமாக உள்ளதென்பதனால் இதனை கூறுகின்றேன். நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை குறித்து பேசும் போது எனக்கு இந்த விடயம் நினைவுக்கு வந்தது.

 

“நான் அதிகாரத்திற்கு வந்த அடுத்த நாள் 10ஆம் திகதி நள்ளிரவில் என்னை தேடி இருவர் வந்தனர். அவர்கள் அந்த காலப்பகுதியின் நீதிமன்றத்தின் உயர் பதவியுள்ள முக்கியஸ்தர் மற்றும் அவரது மனைவியாகும். என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என்னை பதவியில் தொடர்ந்து வைத்திருங்கள் என முக்கியஸ்தர் என்னிடம் கூறினார்.

எனினும் நான் ஜனாதிபதியாகி 24 மணித்தியாலங்கள் நிறைவடையவில்லை. அதற்குள் இதனை பற்றி பேச வேண்டியதில்லை. பிறகு பார்ப்போம் என நான் கூறிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் நள்ளிரவும் இந்த இருவர் என்னை தேடி வந்தனர்.

 

ஜனாதிபதிக்கு எப்படி தீர்ப்பு வழங்க வேண்டுமோ அப்படியான தீர்ப்புகளை வழங்குகின்றேன். என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டாம். இன்னும் ஒரு வருடமாவது பதவியில் நீடிக்க வேண்டும் என குறித்த முக்கியஸ்தர் கூறினார். எனக்கு இவ்வாறான அனுபவங்கள் இல்லை. இதனை குறித்து பேச விரும்பவும் இல்லை. நான் இதற்கு முன்னர் பிரதமர் அல்லது எதிர்க்கட்சி தலைவராகவும் செயற்பட்டதில்லை என கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

 

மூன்றாவது நாளும் என்னை தேடி அவர்கள் வந்தனர். இந்த முறை எனக்கு கோபம் வந்துவிட்டது. இனிமேல் என்னை பார்க்க வரவேண்டாம். அந்த பதவி தொடர்பில் நாங்கள் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளோம். எனவே இனிமேல் தேடி வராதீர்கள் என கூறி அனுப்பி விட்டேன். என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்