சிறைச்சாலையில் பள்ளிப் படிப்பைத் தொடரும் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, வி.கே.சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்று சசிகலா கன்னடம் பயின்று வருகிறார்.

இந்த திட்டம் மூலம் கன்னட எழுத்துக்கள், அடிப்படையான படிக்கும் திறன், உச்சரிப்பு ஆகியவை கற்று தரப்படுகிறது. மேலும் கணினி அறிவியலும் சசிகலா கற்று கொண்டிருக்கிறார்.
அவருடன் இளவரசியும் சேர்ந்து கற்று வருகின்றனர். இதற்கான தேர்வில் இளவரசி சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. சசிகலா மௌன விரதம் இருப்பதால், வாய்மொழித் தேர்வுகளில் பங்கேற்பதில்லை.

அதேசமயம் எழுத்துத் தேர்வுகளில் திறம்பட செய்து வருகிறார். பாடத்திட்டத்தின் நிறைவில் இருவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. சசிகலாவிற்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம்.

அதனால் சிறையில் பெண்களுக்கென தனியாக நூலகம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்களுக்கு மட்டும் நூலகம் செயல்பட்டு வந்தது.

புதிய நூலகத்திற்காக ரூ.30,000 கூடுதலாக செலவிட்டு, 91 செய்தித்தாள்களையும், மாத/வார/ இதழ்களையும் வாங்க திட்டமிட்டுள்ளது.

பெண்களுக்கு தனியாக நூலகம் அமைக்கப்படுவதில் சசிகலாவின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.