சபரிமலை கோவில் மண்டல பூஜை இன்று!

மண்டலபூஜையையொட்டி கடந்த மாதம் 15-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. 16- ம் திகதி முதல் வழக்கமான பூஜைகள் நடந்து வருகிறது.

நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இன்று நடைபெறும் மண்டல பூஜையின்போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி கடந்த 22-ம் திகதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.

நேற்று மதியம் தங்க அங்கி பம்பை வந்து சேர்ந்தது. பம்பை கணபதி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின் தலைச்சுமையாக தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி மேள- தாளம் முழங்க சபரிமலை கொண்டு செல்லப்பட்டது.

நேற்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்த தங்க அங்கிக்கு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் 18-ம் படிக்கு கீழ்பகுதியில் வைத்து தந்திரியிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்டது.

பிறகு 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பின்னர், 11.55 மணி முதல் மதியம் 1 மணி வரை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறுகிறது.

மண்டல பூஜையை முன்னிட்டு பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கமாண்டோ வீரர்கள், விரைவு அதிரடி படையினர், தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.