கொய்யா இலை கசாயத்துக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா? நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்!

முடி உதிர்தல் பிரச்னை நாளுக்கு நாள் மாறிவரும் உணவு, தண்ணீர் மற்றும் லைஃப்ஸ்டைல் காரணமாக அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. என்ன தான் தரமான ஷாம்பு, கன்டிஷ்னர்கள் பயன்படுத்தினாலும் கூட இந்த பிரச்னை ஓய்ந்தபாடில்லை.

ஆனால் இதற்கு நம்முடைய வீட்டிலேயே நல்ல தீர்வு இருப்பதை நாம் அறிந்து கொள்வதில்லை. வெறும் கொய்யா இலைகளைக் கொண்டே உங்கள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்திவிட முடியும்.

கொய்யா இலையில் வைட்டமின் பி3, பி5, மற்றும் பி6 ஆகியவை அடங்கியுள்ளன. பெரும்பாலும் நாம் வாங்கும் அழகு சாதனப் பொருள்களில் இந்த சத்துக்கள் அடங்கியிருக்கும்.

கொய்யா பழத்திலுள்ள சத்துக்களைப் போலவே அதன் இலையிலும் சத்துக்கள் அதிகம். அது சருமம் மற்றும் கூந்தலுக்குப் பல வழிகளில் பயன் அளிக்கிறது.

கொய்யா இலைகளைக் கொண்டு செய்யப்படும் டிக்காஷன் தலைமுடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக ஆண்களுக்கு பரம்பரை வழுக்கையைத் தவிர மற்றபடி வழுக்கை உண்டாகாமல் காக்க முடியும்.

கொய்யா டிக்காஷன்

இலைகளை ஃபிரஷ்ஷாகப் பறித்துப் பயன்படுத்துவது தான் நல்ல பலனைத் தரும்.

30 முதல் 40 கொய்யா இலைகளைப் பறித்து இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலும் கொதிக்க வையுங்கள். பின்னர் அதை இறக்கியதும் ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.

இந்த டிக்காஷனை தலையில் வேர்க்கால்களுக்குள் இறங்கும்படி நன்கு தடவுங்கள். வேர்க்கால்களில் தொடங்கி முடியின் நுனிப்பகுதி வரையிலும் நன்கு தடவி, 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.

நன்கு ஊறிய பின்னர் ஷாம்பு ஏதும் போடாமல் வெறுமனே தண்ணீரில் முடியை அலசவும்.

இதை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதால் முடி உதிர்தல் பிரச்னைக்கு மிக விரைவாகத் தீர்வு காண முடியும். முடியின் வேர்க்கால்கள் பலப்படும்.