காலியில் சூறாவளி – டொர்னடோ சூறாவளியின் நேரடி வீடியோ காட்சி!!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதோடு பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், காலியில் டொர்னடோ சூறாவளி ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியொன்றும் பரவி வருகின்றது.

காலி மாவட்டத்தின் பிரதான ஆறான கிங்கங்கையில் தற்போதைக்கு வௌ்ள அபாயம் ஏற்படுமளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, காலி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.

 

இதன் காரணமாக காலி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதுடன், தொடங்கொட பிரதேசத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் தற்போதைக்கு வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
பெந்தறை மாதுகங்கையிலும் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால் மாதுகங்கையின் அயற்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை கவனமாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே காலியில் தொடர்ந்தும் கடுமையான மழை பெய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

மேலும், களுத்துறை மற்றும் புளத்சிங்கள பகுதிகளில் அநேகமான தாழ் நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கடந்த நாட்களில் ஏற்பட்ட கடும் மழையுடனான காலநிலையின் காரணமாக இவ்வாறு தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

அத்துடன் மாத்தறை நில்வலா கங்கைக்கு அண்மித்த சில பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக இன்று அதிகாலை இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

மேலும் நில்வலா கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரிப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

 

பாணதுகம மற்றும் அதற்கு கீழ் உள்ள நில்வலா கங்கையின் இரு கரைப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் வீதிகள் பல வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன.

 

பாணதுகம – அகுரெஸ்ஸ, அகுரெஸ்ஸ – முலடியன மற்றும் கம்புருபிட்டிய – முலடியன ஆகிய வீதிகள் இவ்வாறு வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 

காலி மாவட்டத்திலும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாகொட – பத்தேகம, மாபல கம – எல்பிட்டிய, நாகொட – உடுகம, காலி, வக்வெல்ல ஆகிய வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

 

இதன்காரணமாக பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.