காலத்தை உள்வாங்கும் ஜி.எஸ்.டி., பிள்ளையார்!

சமூகத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் உடனடியாக கலை வடிவங்கள் உள்வாங்குகின்றன. இப்படி கலைகளில் புகும் புதுமைகள், என்றுமே அதன் மீதான ஈர்ப்பை ஒருபடி உயர்த்திக்கொண்டுதான் செல்கிறது என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

 

அதேபோல், காலத்தையும் சூழலையும் நுட்பமாக உள்வாங்கி அதை கலையில் புகுத்தும் படைப்பாளர்கள் மட்டுமே அதில் ஜொலிக்க முடியும். இதை நிரூபித்து இருக்கிறார் குனியமுத்துார் பகுதியைச் சேர்ந்த ராஜா. இந்தமுறை இவர் கையில் எடுத்திருப்பது ஜி.எஸ்.டி.,யையும் விநாயகரையும்!

 

குட்டீஸ்கள் முதல் அனைவருக்கும் பிடித்த பிள்ளையாரை பலவடிங்களில், பல வகைகளில் இதுவரை பார்த்திருப்போம்; ரசித்திருப்போம். ஆனால், சுனாமியாக, மரம் நடுபவராக, நாகமாக, கேசரி, வெல்லம், நிலக்கடலை இப்படியாக மாறிய விநாயகரை கேள்விப்பட்டிப்பீர்களா? இதுபோன்று 15க்கும் மேற்பட்ட புது வடிவ பிள்ளையார்களை வடிவமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

 

இவர் நம்மிடம் பகிர்ந்தவை…

சிறு வயதில் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து விளையாட்டுத்தனமாக எதோ உருவத்தை வடிமைத்துக் கொண்டிருப்போம். உண்மையாக படைப்புத்திறன் துவங்குவது அங்கிருந்து தான். பலர் அதை பாதியோடு நிறுத்தி விடுகின்றனர். எனக்கு அந்தப்பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

 

எதையுமே வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம். புதுசு புதுசாக ஏதோவடிவில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். தேன்மெழுகு, சோப்பு, சாக்ஸ்பீஸ், மாத்திரை, தங்கம் என, கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து சமீபத்திய நிகழ்வுகள், அன்றைய சிறப்பு தினங்கள், பண்டிகைகளுக்கேற்ப நானே ஒரு தலைப்பில் கலைப்பொருட்களை உருவாக்கி விடுவேன்.

 

அப்படி உருவானதுதான் பிள்ளையார் சிலைகள். வரும் 25ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலவித பிள்ளையார்களை உருவாக்கியுள்ளேன். வேர்க்கடலை, எலி, மங்களம், நவதானியம், கேசரி, கருணை, சுனாமி, யோகா, தேங்காய், சர்க்கரைவள்ளி, மரவள்ளி, நாகம், மரம் நடும் விநாயகர்ணு இதுவரை இந்த வடிவில் பிள்ளையாரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இதில், ஜி.எஸ்.டி., பிள்ளையாரும் உண்டு. உருண்டை வெல்லம், மெழுகு மற்றும் எள்ளை பயன்படுத்தியும் விநாயகரை வடிவமைத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.