காரம் தாங்கலப்பா ! – சிறுகதை

வருணபுரி நாட்டு விதூஷகன் கமலன் சரியான சமர்த்துக்காரன். தன்னுடைய சாதுர்யமான பேச்சினால், காரியத்தை சாதித்து விடுவான்.

அவ்வப்போது அரசருடன் சேர்ந்து உணவு உண்பான்.
அங்கே அவன் தட்டில் எந்த உணவை வைத்தாலும் எந்தக் குறையும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவான்.

“நான் எல்லா உணவு வகைகளையும் விருப்பத்துடன் சாப்பிடுவேன். என்னால் சாப்பிட முடியாத உணவே இல்லை’ என்று பெருமையாக பேசுவான்.

இப்படித் தொடர்ந்து இவனது பீத்தலை கவனித்து வந்தார் அரசர்.

இதனால், எரிச்சல் அடைந்தார் அவர். அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தார். சமையல்காரனை அழைத்தார்.

“”இன்று கமலன் சாப்பிட வருவான். அவனுக்கு வைக்கும் வறுத்த மீனில், அதிகமான மிளகாய்த் தூள் இருக்க வேண்டும். காரம் தாங்காமல் அவன் துன்பப்பட வேண்டும். அப்படி அவன் துன்பப்படாமல் இருந்தால், உன்னைத் தொலைத்து விடுவேன்,” என்றார்.

சமையல்காரனும் நிறைய காரம் போட்டுச் சமைத்து வைத்தான்.

வழக்கம் போல அரசருடன் சாப்பிட அமர்ந்தான் விதூஷகன். தன் தட்டில் இருந்த வறுத்த மீன்களில் ஒன்றை எடுத்து சாப்பிட்டான். மீனில் காரம் அதிகமாக இருந்தது. காரம் தாங்காமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. தன் துன்பத்தை அரசருக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு, ஏதும் பேசாமல் சாப்பிடத் தொடங்கினான்.

அவன் நிலையை கவனித்த அரசன், அவனைக் கேலி செய்து மகிழ நினைத்தார்.

“”ஏன் உன் கண்களில் கண்ணீர் வருகிறது?” என்று கிண்டலாகக் கேட்டார்.

அரசரின் வேலைதான் இது என்பது அவனுக்குப் புரிந்தது. அவரின் கேலிக்கு ஆளாகக் கூடாது. தாங்க முடியாத காரத்தின் வேதனையையும் வெளிப்படுத்த வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான்.

“”அரசே! என் தாயார்தான் எப்போதும் இப்படிக் காரமாக மீனை வறுத்து வைப்பாள். இந்த மீனை சாப்பிட்டதும், அவரின் நினைவு வந்து விட்டது. ஐயோ! அம்மா! என்னை விட்டு நீ போய் விட்டாயே…” என்று அவன் அழத் தொடங்கினான்.

அவனது ஒப்பாரியை தாங்க முடியாமலும், நிறுத்த முடியாமலும் நொந்துப் போனார் அரசர்.