காதல் டாட்டுவால் கவரப்படும் பெண்கள்..!

காதலை ‘டாட்டூ’ மூலம் உறுதிசெய்ய டாட்டூ கலைஞர்கள் விதவிதமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதயத்தில் ஆரம்பித்து ஊசி முனைபோல் ஊடுருவும் டாட்டூவை வரைய காதலர்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் அது காதலனின் இதயத்தில் இருந்து தொடங்கி காதலியை நோக்கி செல்லும். அதுபோல் காதலியிடம் இருந்து தொடங்குவது காதலனை நோக்கி வரும். ஊசி முனைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததுபோல் காட்சியளிக்கவேண்டும் என்றால் காதலன்- காதலி இருவரும் கரங்களை அருகருகே வைக்க வேண்டும்.

அப்போது கையோடு கை உரசி காதல் உணர்வுக்கு சூடுஏற்றும். இந்த ‘இதய ஊசி டாட்டூ’வை வரைய காதலர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே டாட்டூ கலைஞரை நாடவேண்டும். ஏன் என்றால் அவர் இரு கை களையும் பார்த்து ஒரே மாதிரி அளந்து வரைந்தால் மட்டுமே ஊசி முனை சரியாக ஒன்றை நோக்கி இன்னொன்று பாய்வதுபோல் இருக்கும். ஒருவர் இதயத்தில் இருந்து இன்னொருவர் இதயத்திற்கு (காதல்) அம்பு பாய்வது போலவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
design
இப்போது நிறைய காதலர்கள் இந்த டாட்டூ விஷயத்தில் கவனமாக இருக்கிறார்கள். அதாவது, அறிமுகமாகும் முதல் காதலர் தினத்தில் அழியாத டாட்டூவால் கையில் காதலன் பெயரை வரைந்த பலர், அடுத்த காதலர்தினத்திற்குள் காதலை முறித்துவிடுவதும் உண்டு. அதனால் நிறைய பெண்கள் இப்போது காதலன் பெயரை நிரந்தர டாட்டூவாக பதித்துக்கொள்வதில்லை. அதற்கு பதில் கையில் காதலனின் முதல் எழுத்தை மட்டும் வரைந்து காதலை உறுதி செய்து கொள்கிறார்கள்.

“முன்பு பெண்கள் நெஞ்சில்கூட காதலன் பெயரை டாட்டூவாக்கினார்கள். இப்போது காதுகளின் பின்பகுதியில், கழுத்தில், கைவிரல்களில் மட்டும் காதலனின் பெயரின் ஆங்கில முதல் எழுத்தை பதிக்கிறார்கள். ஆண்கள் தோளின் பின்பகுதியிலும், கால் விரல்களிலும் பதிக்கிறார்கள்” என்கிறார், சென்னையை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஒருவர்.
tatoo

‘காதல் டாட்டூ’ கவனிக்க வேண்டியவை
டாட்டூ வரைந்த பின்பு அடுத்த 20 நாட்கள், அதன் மீது சோப்போ, இரசாயனங்களோ பட்டுவிடக்கூடாது. அதனால் டாட்டூ கலைஞரிடம் அதன் பராமரிப்பு முறை பற்றி விளக்கமாக கேட்டுக்கொள்ளுங்கள்.

டாட்டூ ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி ஏதாவது ஏற்படுவதுபோல் இருந்தால், உடனே அதில் தேங்காய் எண்ணெய் பூசலாம். உடனே சரும நோய் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

டாட்டூவாக காதலனின் பெயரை வரைந்து கொண்டவர்கள், காதல் தோல்வியடைந்துவிட்டால் அதற்காக ரொம்ப கவலைப்படவேண்டியதில்லை. அதையே ஒரு புதிய டிசைனாக மாற்றி, பெயரை மறைத்துவிடலாம்.

தேர்ச்சி பெற்ற கலைஞர்களைக்கொண்ட தரமான மையங்களில் மட்டும் டாட்டூ வரையுங்கள்.