காதலர் தின ஸ்பெஷல் – கிஃப்ட் பிங்க் மஃபின் கேக்…!

தேவையான பொருட்கள்:

உருக்கிய உப்பில்லாத வெண்ணெய் – 125 கிராம்

சர்க்கரை – 125 கிராம்

முட்டை – 2

மைதா மாவு – 125 கிராம்

ராஸ்பெர்ரி – 150 கிராம்

பேசன் ஃப்ரூட் – பழத்தை உடைத்து உள்ளிருக்கும் பல்ப் பகுதியை மட்டும் கூழாக்கிக்கொள்ள வேண்டும்.

பால் –  சிறிதளவு

கேக்கில் ஐஸிங் செய்யத் தேவையானவை:

ஐஸிங் சுகர் – 500 கிராம்

வெண்ணெய் – 160 கிராம்

வெனிலா பீன்ஸ்- 1 விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்

இளஞ்சிவப்பு நிற ஃபுட் கலர் ஏஜண்ட் – 2 அல்லது 3 துளுகள்.

பால் – 50 மில்லி

கேக் செய்முறை…

பெப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் கேக் செய்வதைப் பற்றி இப்போது காண்போம்.

அவனில் கேக் செய்பவர்களாக இருந்தால் 180 டிகிரி செல்சியஸ் அளவில் அவனை முன்கூட்டியே ஹீட் செய்து கொள்ளவும். கேஸ் அடுப்பு தான் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் 350 ஃபாரன்ஹீட் அளவில் வெப்பம் இருக்குமாறு செட் செய்து கொள்ளவும்.

கேக் செய்வதற்குத் தோதாக ட்ரே ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் கப் கேக் செய்யத்தோதாக 12 பேப்பர் கப்களை வைக்கவும்.

வெண்ணெயையும், சர்க்கரையும் கலந்து கிரீம் நிறம் கிடைக்கும் வரை நன்கு அடித்துக் கலக்கவும். இதனோடு முட்டையை அடித்து ஊற்றி, மைதாமாவையும் சேர்த்து நன்கு பிசையவும்.

இத்துடன் ராஸ்பெர்ரி மற்றும் பேசன் ஃப்ரூட் கூழ் இரண்டையும் சேர்த்து மாவு மிருதுவான பதத்தை அடையுமாறு கைகளால் நன்கு அழுத்திப் பிசையவும். தேவையென்றால் மாவு கடினமாக இருப்பதாகத் தோன்றினால் மட்டும் சிறிதளவு பால் சேர்த்துப் பிசையலாம்.

இந்தக் கலவையை சிறிது நேரம் அப்படியே ஊற விட்டு பின் 12 கப்களுக்கும் சரிசமமாகப் பங்கிட்டு மாவை நிரப்பவும். பின் 20 நிமிடங்கள் டைம் செட் செய்து அவனில் வைத்து பேக் செய்யவும். பிறகு அவனிலிருந்து வெளியில் எடுத்து 10 நிமிடங்கள் ஆற விட்டு கேக்குகள் நன்கு ஆறிக் குளிர்ந்த பின் ஒவ்வொன்றாகத் தனித்தனியே ஐஸிங் செய்து பரிமாறவும்.

ஐஸிங் செய்யும் முறை…

ஐஸிங் சுகர், வெண்ணெய் இரண்டையும் ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு நன்கு அடித்துக் கலக்கவும்.

அப்படிக் கலக்கும் போது சிறிது, சிறிதாக பால் சேர்த்து கலவை ஒரு தேர்ந்த பேஸ்ட் பதத்துக்கு வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக ஐஸிங் செய்யப் பயன்படும்  ஸ்டார் வடிவத் துளை கொண்ட பைப்பிங் பேக் ஒன்றில் மேற்கண்ட கலவையை நிரப்பி கப் கேக்குகளின் மேல் இளஞ்சிவப்பு நிறக் கிரீமால் ஐஸிங் செய்யவும்.

இப்போது காதலர்தின ஸ்பெஷல் கேக் தயார்.