கழிவுத்துணி குப்பைகளால் அசௌகரியத்தில் அம்பாள்குள மக்கள்!!!

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழுகின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையின் கழிவு துணிகளை தனிநபர் ஒருவர் கொள்வனவு செய்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுப்பட்டு வருகின்றார்.

 

அவர் தான் கொள்வனவு செய்யும் கழிவு துணிகளை தனது காணியில் வெட்ட வெளியில் களஞ்சியப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவு கழிவு துணிகள் இவ்வாறு குப்பை மேடு போன்று காணப்பட்டு வருகிறது.

அத்தோடு அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக மேற்படி கழிவு துணிகள் நனைந்ததோடு மட்டுமன்றி அருகில் உள்ள கழிவு வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள பிரதேசங்களில் சிதறிக் காணப்படுகிறது.

இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் பொது சுகாதார பரிசோதகரினால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறித்த நபருக்கு நீதிமன்றம் மூன்று வார காலம் அவகாசம் வழங்கி இருக்கின்றது.