கல்விச் சேவையாளர்களுக்கு 5 வருட சம்பள உயர்வு!

கடந்த 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையான 20 ஆண்டு காலம் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளான இலங்கை நிருவாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பள உயர்வை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

சேவையில் இருந்து ஓய்வு பெற்றோர் மற்றும் தற்போது சேவையில் உள்ளோர் என இரு தரப்பினருக்கும் இந்நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

அரசியல் பழிவாங்கல்களுக்குள்ள குறித்த சேவையில் உள்ளவர்களுக்கு எவ்வித பதவியுயர்வும் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் குழுவினால் சிபாரிசு செய்யப்படவில்லை. மாறாக அதிகபட்ச நிவாரணமாக ஆகக்கூடிய 5 வருட சம்பள உயர்வுகளை வழங்குமாறு கல்வியமைச்சு கூறியுள்ளது.

இத்தீர்மானம் தொடர்பான கடிதங்கள் அனைத்து மாகாண கல்வித் திணைக்களங்கள், வலய கல்வி அலுவலகங்கள் என்பவற்றுக்கு கல்வியமைச்சின் செயலாளரின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையில் தற்போதும் பணியாற்றுவோருக்கு 2016 மார்ச் 2ஆம் திகதி தொடக்கம் நிலுவையின்றிய கொடுப்பனவும் சேவையில் இருந்து ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் பெற்ற தினத்தில் இருந்து அதிகரிக்கப்பட்டு ஓய்வூதியக் கொடுப்பனவுடன் சேர்த்து வழங்கப்படும்.

பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் இச்சலுகையை பெற்றோரின் சேவை மூப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என்றும் கல்வியமைச்சு தெரித்துள்ளது.