கமல்ஹாசனின் கான்சாஹிப் கதை இது – மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியவை

ராஜராஜன் யார்?  மாவீரன்! இன்றும் பார் போற்றும் அசகாய சூரன். அது மட்டுமா தமிழன் என்றால் யார், அவன் திமிர் என்ன என்பதை உலகறியச் செய்தவன், என்ற அந்தக் கதை தெரிந்த கதை. கட்டபொம்மன்! அட இவன் கதையும் கூட நன்றாகத் தெரியுமே.

 

“வெள்ளையனே வெளியேறு.. மாமனா? மச்சானா? நீ எனக்கு? என்ற இவனும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த ஓர் வீரன். இவனை தெரியாதவர்களுக்கும் கூட அவன் புதினத்தில் வரும் எட்டப்பன் என்ற பாத்திரத்தினை நன்கறிவர்.

 

காரணம் உண்டு தமிழன் எப்படி உலகிற்கு அறியப்படுகின்றானோ, அதேபோல தமிழனோடு துரோகம் பயணிப்பதையும் நன்கறிவோம் நாம். இராஜ ராஜனையும், கட்டபொம்மனையும் ஏன், எட்டப்பன் என்ற முதுகில் குத்தும் திறன் கொண்டவனைப் பற்றியும் அறிந்த எம் பலருக்கு…,

ஓர் மாவீரன் வாழ்ந்தான், எதிரிகள் அவன் பெயரைக் கேட்டாலே நடுநடுங்கிப் போவார்கள். அடங்காத் தமிழன் அவன் தன் வீரத்தை மட்டுமே நம்பிருந்தான். “வெள்ளையனே வெளியேறு” எனக் கூறாவிட்டாலும் வெள்ளையனும் கண்டால் வெடவெடத்துப்போகும் ஒரு கதாபாத்திரம். அவனும் கூட ஒரு வகையில் துரோகத்தாலேயே வீழ்த்தப்பட்டான் என்பது தமிழர்கள் எம்மில் பலருக்கு தெரியாத விடயம்.

 

அவன் பெயர் கான்சாஹிப் எனப்படும் முகமது யூசுப்கான். இந்தப் பெயர் பலருக்கு தெரியாது. ஆனால் வெள்ளையனை நடுங்கவைத்த வீரன் இவன். வெள்ளையன் படையில் இவன் தளபதியாக பணியாற்றியதாலோ தெரியவில்லை இன்று இந்த மாவீரன் பற்றி பெரிதாக எவரும் பேசுவதில்லை.

 

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்த அந்த மாபெரும் வீரனுடைய உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட சிரசு ஒரு திசைக்கும், கரங்கள் வேறு திசைக்கும், கால்கள் வேறு திசைக்கும் தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டன. காரணம் இவனைக் கண்டு அஞ்சி நடுங்கியவர்களுக்கு “இனி அந்த மாவீரன் வரமாட்டான், தைரியமாக இருங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்வதற்காக. இங்கு சொல்ல மறந்த ஒரு கதை அந்த வீரன் துரோகத்தால் கொல்லப்பட்டான் என்பதுதான்.

 

யார் இந்த மாவீரன்? எதற்காக அவனுக்கு இத்தகைய கோர முடிவு வரவேண்டும்?  அனைத்தையும் விரிவாகச் சொல்லி விளக்க முடியாது என்றாலும் முடிந்தவரை அவனைப்பற்றி அறியத்தர முயல்கின்றேன். முக்கிய காரணம், தமிழர் வரலாற்றை நிரப்பிய பல ஆளுமைகளின் வரலாறு புழுதி பட்டு அழிந்து போய் விடக் கூடாது என்ற நோக்கம். சுற்றிவந்த காலச்சக்கரத்தினை பின்னோக்கிச் சுழலச் செய்து அவன் கதையை படித்துப்பார்ப்போம்.

 

யூசுப்கான், கி.பி. 1720 – கி.பி 1730 இற்கு இடைப்பட்ட காலத்திலே இவன் பிறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டாலும் கி.பி 1725 ஆம் ஆண்டே யூசுப்கான் பிறந்ததாகவும் கணிப்புகள் உண்டு. வரலாற்றில் அவன் பதியப்படுவான் என்பது அப்போது அவனது பிள்ளைப் பராயத்தைக் கண்டவர்கள் நிச்சயம் சொல்லிருப்பார்கள்.

 

வாள் சுழற்றுவதில் சூரனான இவன் வளரும் பருவம் முதலே வீரத்தையும் தன்னோடு சேர்த்து வளர்த்து வந்தான். மருத்துவம், தையல், படகோட்டல், விளையாட்டு எனப் பல்வேறு வித்தைகளை கற்றிருந்தாலும்  அவனுக்கு என்னமோ போர்க்களம் மட்டுமே மன நிறைவினைத் தருவதாய் அமைந்தது.

 

விபரம் தெரியாத வயது முதலாகவே போர்க்களம் அவன் மூச்சாகப் பதிந்து போனது. அதனால் சிறுவயது முதலாகவே போர்ப்பயிர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான் அந்த இளஞ்சிங்கம். ஒரு மாவீரன் வளர்ந்து வருகின்றான். அதுவும் போர்க்களத்தினை காதலிக்கும் ஓர் வீரனாக வளர்ந்து வருகின்றான்.

அப்போது அவனுக்கு போர்ப்படையில் முதல் அனுபவமாக கிடைத்த வாய்ப்பு தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹனின் படையில் படை வீரன் என்ற பதவி. தனது வருங்காலத்தை, வீரப்பயணத்தை அந்த படையில் இருந்து சாதிக்க முடியாது என்று எண்ணினானோ தெரியவில்லை. அப்படை போதாது என்று அங்கிருந்து புதுச்சேரிக்குச் சென்று பிரெஞ்சுப் படையில் தன்னை வீரப்புலியாக அடையாளப்படுத்திக் கொண்டான் யூசுப்.

 

சிறுவயது முதலாகவே போர் மீது காதல் கொண்டு வளர்ந்தவன் எப்படி இருப்பான்? துடிப்பு, போர் யுக்தி, தலைமைப்பண்பு, அனைத்திலும் பிரெஞ்சுக்காரர்களை விடவும் உயரத்தில் அவன் தென்பட்டதால் பிரஞ்சுப்படையலில் சாதாரண வீரனாக இருந்த அவன் திறமை கண்டு பிரெஞ்சு தளபதிகள் மிரண்டு நின்றனர். அதனால் யூசுப் வளர்ச்சிக்கு அங்கு நீர் சற்றே வார்க்கப்பட்டது. தொடர்ந்து பிரெஞ்சுப்படையில் பல உயர் பதவிகளை தன் வசப்படுத்திக் கொண்டான் யூசுப்.

 

அதே சமயம், ஔரங்கசீப் மறைவினால் முகலாய பேரரசு தென்னிந்தியாவில் வலுவிழந்து சிதறி இருந்த காலம் அது. அப்போது கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோர்களினால் ஆங்காங்கு பல சிற்றரசுகள் தன்போக்கிற்கு உருவெடுத்திருந்தன.  குறிப்பாக ஆற்காட்டின் நவாப் என்ற மகுடத்தினை சூட்டுகின்றவர் யார்? எனும் போராட்டம் விஸ்வரூபமாக உருவெடுத்த கால கட்டம்.

இந்த பதவிப் போட்டி இரத்த உறவுச் சொந்தங்களையும் விட்டு வைக்கவில்லை. சாந்தா சாஹிப், முகம்மது அலி இருவரும் தமக்குள்ளேயே மோதிக்கொண்டனர். சொந்தங்களுக்கு இடையேயான பதவிப் போட்டி மோதல் சாதகமாய்ப் போனது ஆங்கிலேயருக்கும்,

பிரெஞ்சுக்காரர்களுக்கும் தான். அலியும், சாந்தாவும் மோதிக் கொண்டால், அதில் தாம் இலாபத்தைப் பார்க்கலாம் என்பதால் திட்டம் தீட்டிய அந்நியரில், பிரெஞ்சுக்காரர்கள் சாந்தா சாஹிப்பிற்கும், ஆங்கிலேயர் முகம்மது அலிக்கும் தோள் கொடுத்தனர்.

 

 

பதவி மோகம் அந்நியர்களில் பிரவேசம் இரண்டும் ஒன்று சேர்ந்ததால் சாந்தாவும், அலியும் மோதிக்கொண்டனர். சாந்தா சாஹிப் பக்கம் பிரெஞ்சுக்காரர்கள் மட்டுமா நின்றனர்? யூசுப்கான் எனும் மாவீரனும் நின்றான். அதனால் சாந்தாவிற்கு வெற்றிகள் பல ஒன்றன் பின்னர் ஒன்றாக வந்து சேர்ந்தன.

 

ஆங்கிலேயர் படைகளுக்கு ஆட்டம் காட்டுவித்தான் நம் நாயகன் யூசுப்கான். இந்தநிலையில் மைசூர், மராட்டிய படைகள் துணைகொண்டு சாந்தாவையும், யூசுப்கானையும் ஆங்கிலேயர் எதிர்த்தனர். போர்களத்தில் சுழன்று நின்றாலும் கூட்டுப்படைகளை வெல்ல யூசுப்கானால் முடியவில்லை. அந்தப் போரில் வீழ்ந்தது யூசுப் மட்டுமல்ல சாந்தா சாஹிப்பும்தான்.

 

அந்த ஆற்காட்டு போர் யூசுப்கானின் வீரத்தை பறைசாற்றியது. என்றாலும் கடைசிப் போரில் ஏற்பட்ட தோல்வியினால் பிரெஞ்சுப்படைத் தளபதிகளுக்கும், யூசுப்கானுக்கும் உட்பூசல்கள் வெடித்தன.. தூக்கியெறிந்தான் பிரெஞ்சுப்படையை, அடங்கா வீரத்திற்கு தீனி வேண்டும், விலகிச் சென்று ஆங்கிலேயப்படையுடன் இணைந்தான்.

 

தங்களுக்கு எதிராக களத்தில் வாள் சுழற்றிய ஓர் மாவீரரன் தங்கள் பக்கம் இணைந்து கொண்டதால் ஆங்கிலேயருக்கு அது கொண்டாட்ட காலமாய் மாறிப்போனது. அதனால் யூசுப்கானை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ஆங்கிலேயர்கள்.

அடுத்தடுத்து பல போர்க்களம் கண்டு, எதிரி கண்டால் பதைபதைக்கும் ஓர் வீரனாக மாறிப்போன யூசுப்கானின் வரலாற்றை மாற்றியமைக்கும் ஓர் போர் ஏற்பட்டது. தன் வீரத்திற்கு தீனியாக அமையப்போகும் ஓர் பெரும்போரை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் என்பதை அறியாமல் அதனைச் சந்திக்க வாள் கொண்டு பறக்கின்றான் யூசுப்.

 

அவன் வாள் முனையை திருப்பியது இன்னுமோர் மிகப்பெரிய வீரனான மைசூர் ஹைதர் அலிக்கு எதிராக. அக்கால கட்டத்தில் அந்தப்போர் ஏற்பட்டிருக்க கூடாது. யாருக்காக? எதற்காக வாள் வீசுகின்றோம் என்பது கூடத் தெரியாமல் எதிரியை மட்டும் இலக்காகக் கொண்டு ஹைதரை எதிர்த்தான் யூசுப்.

 

நிச்சயமாக அந்தப்போர் யூசுப்பிற்கு தோல்வியைத் தந்திருக்க வேண்டும். அந்த தோல்வி மட்டும் ஏற்பட்டிருந்தால் வரலாறு சற்றே மாறுபட்டிருக்கும். பாரத மண்ணில் அந்நியரை எதிர்த்த ஹைதருக்கு எதிராக போர்க் கோலம் பூண்டான் பாரத மண்ணில் பிறந்த மாவீரன் யூசுப்.

அப்போது ஹைதர் விடுதலைக்காக போர் புரிகின்றார் என்பதறியாத யூசுப் சென்றான், ஹைதரையும் வென்றான். இந்த போர் நாடகத்தின் பின்னணியில் ஆற்காட் நவாப்பின் துரோகமும் கொஞ்சமல்ல மிகையாகவே பணியாற்றியிருந்தன என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்.

சாத்தியமற்ற ஓர் வெற்றியை அப்போது சந்தித்தான் யூசுப். மிகப்பெரிய வீரன் மைசூர் ஹைதரை, யூசுப் வென்றதால் புகழ்கள் அவனைத் தேடி ஓடி வந்து குவிந்தன. முக்கிய வீரனாக மாறிப்போன அவனது வீரப் பயணம் தொடர்ந்தது, ஆங்கிலேயரை எதிர்த்த புலித்தேவனையும் ஆங்கிலேயர் பக்கம் இருந்து யூசுப் வென்றுவிட்டான்.

 

1757 இல் ஓர் போர்க்களம், யூசுப்கானுடன் சில வீரர்கள் மட்டுமே துணை நிற்கின்றனர். இரத்தக் கொதிப்புடன் களத்தில் சொற்ப வீரர்களுடன் தனித்து நிற்கும் யூசுப்பை நூற்றுக்கணக்கான எதிரிகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று தொலைந்தான் யூசுப் என்ற தப்புக் கணக்கையும் போட்டுக்கொண்டே களத்தில் யூசுப்பிற்கு எதிராக வாற்களை சுழற்றத் தொடங்குகின்றனர்.

 

தொடரும்…