கடலுக்குள் இருக்கும் சிவாலயம்!

இந்தியாவில் அகமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே உள்ளது ‘கோலியாக்’ என்ற கடற்கரை கிராமம். இங்குள்ள கடற்கரைதான் பலரையும் வியப்பையும், அதன் வாயிலாக மெய்சிலிர்க்க வைக்கும் பக்தியையும் வழங்கி வருகிறது.

இந்த கடற்கரையில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் இருக்கும் சிவாலயம் எல்லா நேரங்களிலும் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் சுமார் 6 மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி சிவாலயம் வெளிப்படுவதுதான் விசேஷம்.

பெளர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கக் கூடியது. ஆகஸ்ட் -செப்டம்பர் மாதம் பல மணி நேரம் கடல் உள்வாங்கிய நிலையில் இருக்கும். கடல் உள்வாங்க நாமும் அப்படியே நடந்து போகலாம்.

இந்த சிவாலயத்தில் உள்ள இறைவனை அந்தப் பகுதி மக்கள் ‘நிஷ்களங்க மகாதேவர்’ என்று போற்றி வழிபடுகின்றனர்.

இந்த ஆலயம் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது.

மகாபாரதப் போரில் தங்களுடைய கவுரவர்களை எதிர்த்து போரிட்டனர். அவர்கள் அனைவரும் ஒருவகையில் உறவினர்களே, போரில் உறவினர்களையே கொன்றதால், அவர்களுக்கு ஏற்பட்ட களங்கத்தினை போக்குவதற்கு, பாண்டவர்கள் ஐந்து பேரும் தனித்தனியாக 5 சிவலிங்கத்தினை அமைத்து வழிபாடு செய்துள்ளனர்.

அவர்களின் வழிபாட்டில் மனமிரங்கிய சிவபெருமான், அவர்களின் களங்கத்தைப் போக்கினார். இதனால் இந்த இறைவன் ‘நிஷ்களங்க மகாதேவர்’ என்று அழைக்கப்படுவதாக காரண காரியம் கூறப்படுகிறது.