ஓவர் நைட்டில் ஓவியாவை விட பிரபலம் ஆவது எப்படி..?

சமூக வலைதளங்களில் ஓவர் நைட்டில் ஓவியாவை விட பிரபலம் ஆவது அப்படி ஒன்றும் கடினம் இல்லை. ரொம்ப சிம்பிள். சொல்றேன் தீப்பெட்டி அட்டையில் குறிச்சு வெச்சுக்கோங்க…

 

 

தினமும் நடுராத்திரி 6 மணிக்கே எழுந்து எல்லா வேலையும் முடிச்சுட்டு, வாக்கிங் கிளம்பிடணும். அன்னைக்கு என்ன தலைப்பு செய்தியோ அதை நாளிதழ்கள் வால்போஸ்டரை ஒரு பத்து நிமிஷம் வெறிக்க வெறிக்க பார்த்து மனசுல ஏத்திக்கணும். அப்புறம் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அதைப் பற்றி அன்னைக்கு என்ன பேசிட்டு இருக்காங்கனு மண்டையில் ஏத்திக்கணும்.

 

பெரும்பாலும் அந்த செய்தியை ஒரே கோணத்தில் யோசிச்சுதான் எல்லோரும் கம்பு சுத்திட்டு இருப்பாய்ங்க. நீங்களோ யாருமே எதிர்பார்க்காத ஒரு கோணத்துல யோசிச்சு, கம்பை ரிவர்ஸில் சுத்தணும். அப்பதான் ஒரு நாலு பேர் சண்டைக்கு வருவாய்ங்க. நாம கப்பித்தனமா சொல்ற பதிலை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப்போட்டு நம்மளை பிரபலம் ஆக்கிடுவாய்ங்க.

 

அதே மாதிரி எப்பவும், ராஜ்கிரண் மாதிரி மூஞ்சியை சீரியஸாகவே வெச்சுருக்க கூடாது. ‘சண்டக்கோழி’ படத்துல திடீர்னு அவர் மழையில் ஃபுட்பால் ஆடுற மாதிரி நீங்களும் திடீர் டப்ஸ்மாஷ், திடீர் சிங்கிங்’னு எதையவாது போஸ்ட் பண்ணியே ஆகணும். அதுவும் காட்டு மொக்கையா இருக்கணும். அப்போதான் ரீச் ஆவீங்க பார்த்துக்கிடுங்க.

 

சும்மா இருக்கும் நேரத்தில் `ஆதி’, `ஆழ்வார்’, `சுறா’, `பில்லா-2′ போன்ற படங்களைத் தோண்டி எடுத்து கெட்ட கிழி கிழிக்கணும். அப்படி செய்தால் பதிலுக்கு ஏழெட்டு தலைமுறையை தோண்டி எடுத்து நார் நாராய் கிழிப்பார்கள். நமக்கு நேரம் நல்லாயிருந்தால் நமக்காக ஹேஷ்டேக் எல்லாம் க்ரியேட் செய்வார்கள், நாமளும் டபக் டபக்குனு பேமஸ் ஆகிடலாம்.

 

அவிய்ங்க என்னை இன்பாக்ஸ்ல வந்து மிரட்டுறாய்ங்க, கத்தி தெரியுமா? துப்பாக்கி தெரியுமா?னு விஜய் பட டைட்டிலா கேட்டு காமெடி பண்றாய்ங்கனு எதையாவது கிளப்பிவிடணும். முடிஞ்சா காவல்துறையிடமும் புகார் கொடுக்கலாம். அப்படி யாரும் திட்டலைனா, நாமளே ஒரு ஃபேக் ஐடியை உருவாக்கி, மானம் ரோசத்தை எல்லாம் தூக்கிப்போட்டு நமக்கு நாமே திட்டிக்கணும்.

 

 

அதிரசம் தின்ன குண்டாவுக்குள்ள கையை விட்டு உங்க அம்மா கிட்ட அடிவாங்குன உங்க சொந்தக் கதை, சோகக்கதையும் எழுதலாம். ஆனால், அதை அப்படியே எழுதிடக்கூடாது. அந்த சம்பவத்தை ஒன் – லைனா வெச்சு ராஜேஷ்குமார் நாவல் மாதிரி திகிலும், திருப்பங்களும் நிறைஞ்ச மாதிரி எழுதணும். ஒரு பொய் சொன்னால் அதில் சில உண்மையை கலந்துருக்கணும். இப்படி சமூக வலைதளங்களில் சதுரங்க வேட்டை ஆடினாதான் உடனே உலகப் பிரபலம் ஆகமுடியும்.

 

ஊருக்குள்ளே சண்டை போடுற அளவுக்கு சம்பவம் எதுவும் நடக்காதபோது சமூக சேவை செய்ய ஆரம்பிச்சிடணும். செஞ்ச சமூக சேவையை செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் கட்டாயம் போட்டுடணும். அப்போதான், நாளைக்கு ஒரு பிரச்னைனா நாலு பேர் உங்களுக்கு சப்போர்டுக்கு வருவாய்ங்க.

 

அதேபோல், இன்பாக்ஸில் யாராவது சாட் செய்யும்போது உங்களிடம் பல்பு வாங்கினால் அதை அப்படியே விட்ற கூடாது, குப்புகுப்புனு ஊதி பெருசாக்கிடணும். அதாவது அந்த சாட்டிங்கை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போஸ்ட் செய்வது தான் உசிதம்னு சொல்ல வர்றார் உசிலைமணி.